×

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகளைத் தேடி பல இடங்களிலும் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் சோதனை

காஷ்மீர்: காஷ்மீரின் பல இடங்களிலும் தேசிய விசாரணை முகமை என்.ஐ.ஏ. ,ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) குழுக்களுடன் இன்று காலை திடீரென்று சோதனையில் ஈடுபட்டது. சமீபத்தில் காஷ்மீர் காவல்துறைத் தலைவர் வெளியிட்ட தகவல் ஒன்றில் காஷ்மீரில் 2020ல் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் காஷ்மீரில் இன்னும் 250 தீவிரவாதிகள் இருப்பதாகவும் கூறினர்.

இதனை அடுத்து காஷ்மீரில் தற்போது தீவிரவாதிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று நடத்தப்பட்ட சோதனைகள் பெரும்பாலும் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பல இடங்களில் நடைபெற்றன. இன்று காலை புல்வாமாவில் உள்ள கரிமாபாத்தில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ - முகமது  அமைப்பின் போராளியான ஜாஹித் அகமதுவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் காக்போரா மற்றும் ட்ருப்காம் ஆகிய இடங்கள் உள்ளிட்டு மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. தெற்கு காஷ்மீரில் வசிக்கும் ஒருவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனையை நடத்தியது. நக்ரோட்டா என்கவுன்ட்டர் வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கத் தொடங்கிய கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி 31ம் தேதி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் பிளாசாவில் அவர்கள் பயணித்த லாரி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

நக்ரோட்டாவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய மூன்று வெளிநாட்டு தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் புல்வாமாவில் வசிக்கும் சமீர் தார், புல்வாமா தற்கொலைத் தீவிரவாதி ஆதில் தாரின் உறவினர் என அடையாளம் காணப்பட்டனர். ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு மூன்று மறைமுகமாக உதவிய ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த என்கவுன்ட்டரில் வயர்லெஸ் செட் மற்றும் அமெரிக்கா தயாரித்த எம் 4 கார்பைன் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வசம் இருந்து மீட்கப்பட்டன.

இந்த என்கவுண்ட்டர் சம்பவத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் மேலும் நிறைய தீவிரவாதிகளும் தீவிரவாதிகளுக்கு துணைபுரியும் மறைமுக ஆதரவாளர்களும் காஷ்மீரிலேயே இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் தேசிய விசாரணை முகமை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) குழுக்களுடன் இணைந்து கடுமையான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : National Investigation Agency ,Kashmir ,Jaish-e-Mohammed ,extremists ,raids ,places ,search , Kashmir, Jaish-e-Mohammed, extremist, search, multi-location, National Investigation Agency, officials, raid
× RELATED தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக...