×

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பழநி ஜிஹெச் கட்டிடங்களில் சாய்வுதளம் பணி துவக்கம்

பழநி: தினகரன் செய்தி எதிரொலியாக மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பழநி அரசு மருத்துவமனை கட்டிடங்களில் சாய்வுதளம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. பழநி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகளும் அதிகளவு வருகின்றனர். ஆனால், பழநி அரசு மருத்துவமனையில் உள்ள பல கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தேவையான சாய்வுதள வசதி செய்து தரப்படாமல் இருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

பழநி அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சாய்வுதளம் அமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக பழநி அரசு மருத்துவமனையில் செயல்படும் ரத்த சேமிப்பு வங்கி, தலைமை மருத்துவ அலுவலர் அலுவலகம், மருத்துவமனை அலுவலகம், ரத்த பரிசோதனை நிலையம் உட்பட அனைத்து கட்டிங்களிலும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags : Commencement ,buildings ,Palani GH Buildings , Transformer, Facility, Palani GH, Slope Work
× RELATED கொடைக்கானலில் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி துவக்கம்