×

திருவாரூர் அருகே ஒரத்தூரில் ஆன்மீக ருத்ராட்ச மரம்: மக்கள் விளக்கேற்றி வழிபாடு

நீடாமங்கலம்: திருவாரூர் அருகே ஒரத்தூரில் ருத்ராட்ச மரம் உள்ளதை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சிவன் பக்தர்கள், சித்தர்கள் ருத்ராட்ச மாலைகளை அணிந்து சிவபெருமானை பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். இந்த ருத்ராட்ச மரங்கள் பெரும்பாலும் மலை பிரதேசங்கள் மற்றும் காசியில் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று முதல் 25 முகங்களை கொண்ட ருத்தராட்ச கொட்டைகள் உள்ளது.
இதில் 5 முகங்களை கொண்ட கொட்டைகள் எல்லோரும் அணியலாம். உடலில் தோன்றும் உஷ்ணத்தை தணிக்கும். சக்தியுள்ள இந்த ருத்ராட்ச கொட்டைகளை மாலைகளாக சிவபக்தர்கள் அணிவார்கள். தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 5 முக ருத்ராட்ச கொட்டையை விரும்பி அணிகிறார்கள். இதை அணிந்திருந்தால் காத்து கருப்பு நம்மை அண்டாது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஒரத்தூர் கிராமத்திலிருந்து மூணாறு தலைப்பு செல்லும் வழியில் கோரையாறு மேற்கு கரையில் ஆலமரம் ஒன்று உள்ளது. இதனையொட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் அருகே வடக்குபுரம் 25 அடி உயரத்தில் ருத்தராட்ச மரம் ஒன்று வளர்ந்து வருகிறது. இந்த மரம் இங்கு வளர்ந்து வருவது யாருக்கும் தெரியாது. இம்மரத்தில் முதன்முதலாக ருத்ராட்ச கொட்டைகள் காய்க்க தொடங்கியுள்ளது. இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். மரத்தை பார்த்து வியப்படைந்த அவர்கள், அம்மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி, மரத்தின் அடியில் அகல் விளக்குகளை ஏற்றி வணங்கி செல்கின்றனர். இந்த செய்தி காட்டு தீ போல் பரவியதால் கூட்டம் கூட்டமாக திரண்டு செல்லும் மக்கள் ருத்ராட்ச மரத்தை அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags : Orottur ,Thiruvarur , Spiritual Rudraksha Tree,Orottur, Thiruvarur, People Lighting,Worship
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்