×

வேலூர் விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் குறியீடுகள் வரையும் பணி நிறைவு: பழைய கட்டிடங்கள், மரங்கள் அகற்ற நடவடிக்கை

வேலூர்: வேலூர் விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் குறியீடுகள் வரையும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், விமான நிலைய வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு விமான நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கென நாடு முழுவதும் 100 சிறு விமான நிலையங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் விமான நிலையமும் இடம் பிடித்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திட்ட அறிக்கை தயாரித்தல், நிலம் கையகப்படுத்துதல், அலுவலக ரீதியான பூர்வாங்க பணிகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் விமான நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் இழுபறி நிலை நீடித்தது.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் விமான நிலையத்திற்கென சுமார் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கூடுதலாக 60 ஏக்கர் நிலம் வழங்கினர். இதையடுத்து விமான நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டது. 750 மீட்டர் கொண்ட ஓடுதளப் பாதை 800 மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், ஏடிசி டவர் நிலை நிறுத்தும் பணியுடன், விமான நிலைய அலுவலகம் மற்றும் பயணிகளுக்கான கட்டிடங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் ஓய்வு அறை, தகவல் பரிமாற்றம் தொழில்நுட்ப அறை ஆகியவற்றுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்தது.

இதன் ஒருபகுதியாக பள்ளம், மேடாக காணப்பட்ட விமான ஓடுதள பாதையை சீர்செய்ய வண்டல் மண், ஜல்லிக்கல் சிப்ஸ் ஆகியவற்றை கொண்டு நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட அப்துல்லாபுரம்-தார்வழி சாலை ஒப்படைப்பதில் இழிபறி நிலை நீடிப்பதால் விமான நிலையத்திற்கான பணிகள் முழுமை பெறாமல் தேக்கமடைந்துள்ளது.இந்நிலையில், விமான நிலைய ஓடுதள பாதையில் குறியீடுகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘800 மீட்டர் கொண்ட ஓடுதள பாதையில் விமானங்களை எளிதாக ஏற்றி, இறக்கும் வகையில் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மழைநீர் வடிகால்வாய்கள், மின்விளக்குகள், இரவில் விமானங்களை கையாள வசதியாக ரிப்ளெக்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக விமான ஓடுதளத்தின் 200 மீட்டர் தூரத்தில் உள்ள மரங்கள், செல்போன் டவர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகத்திற்கான கட்டிடப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டவுடன் வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள், மரங்கள் ஆகியவை அகற்றப்பட்டு காலி மனையாக மாற்றப்படும், அப்துல்லாபுரம்-தார்வழிச்சாலை கிடைத்தவுடன் விமானங்களை நிறுத்துவதற்கான ஏப்ரான் அமைக்கப்படும்.
சாலை ஒப்படைத்த 3 மாதங்களில் மொத்தப்பணிகளும் முடிக்கப்படும். அதன்பின்னர், டெல்லியில் உள்ள மத்திய விமான போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள், சென்னை விமான நிலைய மேலாளர்கள் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர் குழுக்களிடம் இருந்து உரிமம் பெற்று விமான சேவை தொடங்கப்படும்’ என்றனர்.

Tags : buildings ,runway ,Vellore Airport ,removal , Vellore Airport's,runway,complete codes, old buildings and trees
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...