×

பொதுமக்களின் வசதிக்காக விரைவில் வருகிறது நடமாடும் அம்மா உணவகங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: அம்மா உணவகம் மூலம் வருவாயைப் பெருக்கும் வகையில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது அம்மா உணவக திட்டம். தமிழக மக்கள் தன்னை அம்மா என்று அழைத்ததற்கு இணங்க அவர்களின் பசியை போக்க இத்திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். குறைந்த விலையில் உணவுகளை வழங்கி ஏழை, எளிய மக்களின் பசியாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். 2013ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் மலிவுவிலை உணவகங்கள், மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டன. சென்னையில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், தமிழகத்தின் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் என மொத்தமாக 654 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இங்கு மூன்று வேலையும் மலிவு விலையில், இட்டலி, சாம்பார், கலவை சாத வகைகள், சப்பாத்தி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அம்மா உணவகங்களுக்கு ஆண்டுக்கு 88 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அதனை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல் உருவானது. இப்படியான சூழலில் அம்மா உணவகங்களை மேம்படுத்த 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநகராட்சி நிதியுடன், தமிழக அரசின் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் பல புதிய திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததாவது, தமிழகத்தில் முக்கியமான தேவை இருக்கின்ற இடங்களில் விரைவில் நடமாடும் அம்மா உணவகங்கள் அமைக்கப்படும்.

விற்பனையை அதிகரித்து வருவாயை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நடமாடும் அம்மா உணவகம் என்னும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக முதலில் 3 வேன்கள் ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளன. அந்த வேனில் உணவு பண்டங்களை வைத்து விற்பனை செய்ய வசதியாக மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 3 மண்டலங்களில் இந்த நடமாடும் அம்மா உணவக திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார். வருமாண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே  இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்நடவடிக்கையை வரவேற்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தனிவொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் புரட்சிக்கவி பாரதி. இந்த ரவுத்திர பாடலுக்கு இணங்க உணவின் முக்கியத்துவத்தை அறிந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்க்கப்பாக உள்ளது. தொடர்ந்து, இது தவிர 70 அம்மா உணவகங்களில் ரூபாய் ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனை நடக்கிறது. இதனை மூடாமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு மாற்றம் செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


Tags : Commander ,Prakash ,Soon For Public Convenience Chennai , Coming soon, mommy restaurants, Madras Corporation Commissioner, Prakash
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...