×

காரியாபட்டி மெயின் ரோட்டில் விளம்பர பேனரால் காத்திருக்குது விபரீதம்..! அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

காரியாபட்டி: காரியாபட்டி மெயின் ரோட்டில் விபத்துக்குள்ளாகும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனரை அகற்ற நடவடிக்கை வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி பகுதிகளில் சமீபத்தில் அதிகளவில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் பளிச்சிடுகின்றன. முன்பு அளவுக்கு அதிகமாக விளம்பர  பேனர்கள் வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அரசு விதித்த கட்டுப்பாட்டில் பேனர் வைக்கும் கலாச்சாரம் சிறிது குறைந்து வந்தது. தற்போது மீண்டும் வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் பெரும்பாலும் விளம்பர பேனர்களை வைப்பது துவங்கி விட்டது.  நாளுக்குநாள் அதிகரித்து வரும் பேனர்களால் நகரின் அழகு கெட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மரங்களை பேனர்கள் மறைத்துவிடுகின்றன. மரங்களிலும் பேனர்களை கட்டி வைத்துவிடுகின்றனர்.

மரங்களில் பேனர்கள் வைக்க ஆணி அடிக்கப்படுவதால் மரங்கள் சேதமடைந்து, அதன்ஆயுள்காலம் குறைந்து விடுகிறது. தெருக்களின் பெயர்கள், சாலைகள் விவரங்கள்அடங்கிய வழிகாட்டி பலகைகளும் பேனர்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும் நிலையால் மக்கள் சிரமப்படுகின்றனர். சாலைகளில் வைக்கும் வண்ணமயமான, கவர்ந்து இழுக்ககூடிய விளம்பர பலகைகளால் வாகனஓட்டிகளின் கவனம் திசைதிரும்புகிறது. பேனர் வைப்பவர்கள் பெரும்பாலும் விதிமுறைகளைமுறையாக பின்பற்றுவது கிடையாது. விளம்பர பலகைகள் வைக்கவேண்டுமென்றால் அதற்கு முன்அனுமதி பெற வேண்டும். பேனர்களை குறிப்பிட்ட அளவில் தான் வைக்கவேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் பேனர்களை அகற்றிவிட வேண்டும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என விதிமுறைகள் உள்ளன.

ஆனால் இந்த  விதிமுறைகள் தற்போது காற்றில் பறக்கவிடப்படுகின்றன. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே உள்ளது. இந்நிலையில் தான் காரியாபட்டி பகுதிகளில் பேனர் வைக்கும் பழக்கம் துவங்கி உள்ளது. காவல் நிலையம் அருகில், பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள மெகா விளம்பர பேனாரால் ஆபத்து உள்ளது. காற்று அடித்தல் கீழே விழுந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சமந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : urging ,Kariyapatti Main Road , Advertisement banner
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம்: ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு