×

‘மகனை இழந்தார்... மருத்துவம் படித்தார்’ இன்று டாக்டர் ஆனந்தி கோபால் ஜோஷி நினைவு தினம்

எழுதப்படிக்கவே தெரியாத, இளம் வயதில் திருமணம் புரிந்த ஒரு பெண், தனது மகனின் இறப்பால் மருத்துவம் படித்து டாக்டர் ஆகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் வெளிநாட்டில் மருத்துவம் படித்த முதல் இந்தியப்பெண்மணி, என்ற புகழ் பெற்ற அவர்தான் ஆனந்தி கோபால் ஜோஷி. 21 வயது வரை மட்டுமே, வாழ்ந்தாலும் இணையில்லா புகழை பெற்ற அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா? 1865ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி புனேயில் பிறந்தவர் யமுனா. இவரது குடும்பம் மிகவும் வசதியாகத்தான் இருந்தது. ஆனால், காலத்தின் கோலம் குடும்பத்தில் சொத்துக்கள் ஒவ்வொன்றாக விலை போயின. மிகவும் ஏழ்மை நிலைக்கு யமுனாவின் குடும்பம் சென்றது. ‘பெண் பிள்ளையா வீட்டில அடங்கி இருக்கணும். பள்ளிக்கூடம் எல்லாம் போகக்கூடாது’ என்று ஸ்டிரிக்ட் ஆக இருந்த காலமது. இதனால் பள்ளிக்கூடம் பக்கமே இவர் எட்டிப் பார்க்கவில்லை.

யமுனாவுக்கு 9 வயதாக இருக்கும்போது, குடும்ப ஏழ்ழை காரணமாக இவருக்கு பெற்றோர் கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கு 2ம் தாரமாக திருமணம் செய்து கொடுத்தனர். யமுனாவை விட ஜோஷிக்கு வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? 20 வயது. ஆனாலும், ஜோஷி மிகவும் அன்பாகவே தனது மனைவியை பார்த்துக் கொண்டார். ஆனந்தமாக சென்ற இவர்களது மண வாழ்வின் நினைவாக, மனைவிக்கு ஆனந்திபாய் என பெயரிட்டார். பின்னர் இதுவே ஆனந்தி கோபால் ஜோஷி என ஆனது. 14 வயதில் ஆனந்தி ஒரு ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். ஆனால், விதி இவரது மகனை சீக்கிரமே தன் பக்கம் இழுத்துக் கொண்டது. ஆம்... உடல்நிலை பாதிப்பால் பிறந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே, மகனை இழந்தார். மகனின் மரணத்தால் துவண்டு போகவில்லை ஆனந்தி. ஏனிந்த மரணம்? மருத்துவ வசதிகள் இருந்தால் மகனை காப்பாற்றியிருக்கலாமே என யோசிக்கிறார்.

விளைவு... மருத்துவம் படிக்க ஆர்வமாக இருப்பதாக கணவரிடம் தெரிவிக்கிறார். எழுத, படிக்கவே தெரியாத மனைவி, படிக்க ஆசைப்படுகிறாரே என ஜோஷி யோசிக்கவே இல்லை. அவரே, மொழிப்பாடம் கற்றுக் கொடுக்கிறார். வைராக்கியத்தோடு படித்து கணவரிடம் பாராட்டையும் பெற்றார். இதையடுத்து அமெரிக்காவில் மருத்துவப்படிப்பை படிக்க சென்றார். ‘அது எப்படி ஒரு பெண் வெளிநாடு சென்று படிக்கலாம்’ என்று குடும்பமே போர்க்கொடி தூக்குகிறது.
ஆனால், ஆனந்திக்கு கணவரே பச்சைக்கொடி காட்டி அனுப்பி வைக்கிறார். அங்கேயும் அவருக்கு கடும் சோதனை காத்திருந்தது. பனி அவரை படுத்தி எடுத்ததோடு, காசநோயை தந்து படுக்கவும் வைத்தது. இருந்தாலும் விடாப்பிடியாக படித்து மருத்துவப்படிப்பை முடித்துக் கொண்டு, ‘வெளிநாட்டில் மருத்துவம் படித்த முதல் இந்திய பெண்மணி’ என்ற பெருமையை பெற்றார். 1886ம் ஆண்டு இவரது படிப்பு வெற்றிகரமாக முடிந்தது.

மருத்துவம் முடித்து இந்தியா திரும்பிய ஆனந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மஹாராஷ்டிரா மாநிலத்தின் அப்போதைய கோலாப்பூர் மன்னர் அவரை ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையின்  மருத்துவராகப் பணியில் அமர்த்தினார். பொறுப்புமிக்க அந்த பதவியிலும் அவரால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. காசநோய் மீண்டும் வாட்ட, 1887ம் ஆண்டு, பிப்.26ம் தேதி உயிரிழந்தார்.இளம் வயதில் திருமணம், குழந்தை, மருத்துவர் என்ற புகழை பெற்ற இவர், மிகவும் இளம் வயதிலேயே (22) உயிரிழந்தது இந்தியாவுக்கு பேரிடியாக இருந்தது.


Tags : Anandi Gopal Joshi ,Memorial Day , Dr. Anandi Gopal Joshi, Memorial Day
× RELATED மதுரை காந்தி மியூசியத்தில்...