×

காவல்துறையினரின் மெத்தனப்போக்குதான் டெல்லி வன்முறைக்கு காரணம்; வெறுப்புணர்வுடன் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்? : உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: டெல்லி வன்முறைக்கு காவல்துறையினரின் மெத்தனப்போக்குதான் காரணம் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கலவரத்தின் போது டெல்லி போலீஸ் திறமையின்றி செயல்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டப்படி போலீஸ் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கலவரம் ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள், டெல்லி கலவரத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையான சம்பவம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வன்முறையில் 20 பேர் பலி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஜாஃப்ராபாத், மவ்ஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக், கர்தம்பூரி, தயால்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் வன்முறை நீடித்தது. இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் தகவல் ஆணையர் வாஜாஹத் ஹபிபுல்லா, பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் சமூக ஆர்வலர் பகதூர் அப்பாஸ் நக்வி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.  ஷாகீன் பாக் உள்ளிட்ட டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாஜ முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பேச்சே ஜப்ராபாத் பகுதியில் வன்முறை ஏற்பட காரணமாக அமைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெல்லி போலீசின் மெத்தனபோக்குதான் பிரச்சனைக்கு காரணம்

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் கடுமையான வன்முறை தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்பதா அல்லது மறுப்பது என்பது தொடர்பாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் இதுதொடர்பாக வழக்குகள் ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக முதலில் டெல்லி உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை என்பது நடந்திருக்கக் கூடாது. எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவமாக தான் நாங்கள் பார்க்கின்றோம் என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், டெல்லி காவல்துறையினர் மெத்தன போக்கே பிரச்சனைக்கு காரணம் என்று தெரிவித்தனர். அவர்களின் செயல்பாடுகளில் எந்தவிதமான ஒரு கட்டமைப்பும் இல்லாதது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருந்திருக்கிறது. வன்முறை வெடித்ததால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனடியாக எடுத்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : Delhi ,Supreme Court ,crackdown ,The Supreme Court , Delhi, CM, Arvind Kejriwal, Demands, Northeast, Citizenship Law, Violence, Supreme Court
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு