×

தேவையான அளவு மணல் கிடைத்தும் எம்.சாண்டில் கட்டப்படும் அரசு கட்டிடங்கள்: கேள்விக்குறியாகும் உறுதித்தன்மை?

அறந்தாங்கி: அறந்தாங்கி பகுதி வௌ்ளாறில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் மணல் எடுக்கப்படும் நிலையில், அரசு பணிகளுக்குக்கு கூட மணல் கிடைக்காததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடப் பணிகள் எம்.சாண்டில் கட்டப்படுவதால், கட்டிடம் உறுதியாக இருக்குமா என்ற கேள்விக்குறியாகி உள்ளது. அறந்தாங்கியில் சுமார்ரூ.2 கோடி மதிப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள், சுமார்ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறந்தாங்கி தாசில்தார்அலுவலகம், சுமார்ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் வருவாய் கோட்டாச்சியர்அலுவலகம், சுமார்ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் ஆவுடையார்கோவில் தாசில்தார்அலுவலகம், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அறந்தாங்கியில் தீயiணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் போன்ற கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார்ரூ.2 கோடி மதிப்பில் அறந்தாங்கியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்அலுவலகம் கட்டும் பணி தொடங்க உள்ளது.

கட்டுமானப்பணிக்கு தேவையான பொருள்களில் மணல் முக்கியமான ஒன்றாகும். அறந்தாங்கி பகுதி வௌ்ளாறில் கிடைக்கும் மணல் அதிக தரத்துடன் கூடிய நம்பர்ஒன் மணலாக விளங்கி வருகிறது. தற்போது அழியாநிலை பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மணல் அள்ளப்பட்டு, கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, மணல் ஆன்லைன் மூலம் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெறுவதால், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மணல் கிடைப்பதில்லை. மாறாக தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர்உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மணல் கிடைக்கிறது. இந்நிலையில் அறந்தாங்கி பகுதியில் நடைபெறும் அரசு கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு தேவையான மணல் கிடைக்காததால், அனைத்து கட்டிடங்களும் எம்.சாண்ட் மூலம் கட்டப்பட்டு வருகிறது.

பொறியாளர்களின் கூற்றுப்படி எம்.சாண்ட் மணலைப் போன்றே உள்ளதால் தரமானதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளதால், மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசு எம்.சாண்ட் மூலம் அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியில் தேவையான அளவு மணல் இருந்தும், அரசு கட்டிடங்களின் கட்டுமானப் பணி எம்.சாண்ட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சிமெண்ட் நிறத்திலேயே எம்.சாண்ட் உள்ளதால், கட்டுமானத் தொழிலாளர்கள் சிமெண்டிற்கு பதிலாக அதிக அளவு எம்.சாண்டை சேர்த்து விடுவதால், கட்டுமானங்கள் தரமற்றதாகி விடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.சாண்டில் கட்டப்பட்டு வரும் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தின் ஒருபகுதி சேதமடைந்தது.

இதே போல் எம்.சாண்டில் கட்டப்படும் கட்டிடம் நீடித்து நிலைக்குமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. அறந்தாங்கியில் பொதுப்பணித்துறை குவாரி அமைத்து மணல் அள்ளும்போது, அனைத்து அரசு பணிகளுக்கும் சுமார்60 லாரி மணல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். உள்ளூரில் மணல் இருக்கும்போது, அரசு நினைத்தால் சிறப்பு அனுமதியோடு, அரசு பணிகளுக்கு மணல் வழங்க முடியும். ஆனால் பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு அரசு கட்டிட கட்டுமானப் பணிக்கு தனது துறையின் மற்றொரு பிரிவான நீர்வள ஆதார அமைப்பில் இருந்து மணல் வாங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் எம்.சாண்ட் மூலம் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் அறந்தாங்கியில் நடைபெறும் அரசு கட்டிடங்கள் கட்டும் பணிக்கு தேவையான மணலை பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவிடம் நேரடியாக வழங்கி, கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* அறந்தாங்கி பகுதியில் தேவையான அளவு மணல் இருந்தும், அரசு கட்டிடங்களின் கட்டுமானப் பணி எம்.சாண்ட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
* சிமெண்ட் நிறத்திலேயே எம்.சாண்ட் உள்ளதால், கட்டுமானத் தொழிலாளர்கள் சிமெண்டிற்கு பதிலாக அதிக அளவு எம்.சாண்டை சேர்த்து விடுவதால், கட்டுமானங்கள் தரமற்றதாகி விடுகிறது.

Tags : Government Buildings , Sand, government buildings, stability
× RELATED உத்திரமேரூர் அருகே ரூ.99 லட்சத்தில்...