×

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகளை உடைத்து விற்பனை?: விசாரணைக்கு பின் 7 பேர் விடுவிப்பு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கடற்கரை பகுதியில் பவளப்பாறைகளை உடைத்து விற்பனை செய்ததாக 7 பேரிடம், மத்திய கடல்வாழ் உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் 7 பேரும்
விடுவிக்கப்பட்டனர். பாக் ஜலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை பவளப்பாறைகள் உள்ளன. கடற்கரை அரிமானத்தை தடுக்கும் வகையிலும், கடல் சுற்றுச்சூழலை பாதுகாத்தும், கடலில் வாழும் பலவகையான மீன்களின் இயற்கை வாழ்விடமாகவும் விளங்கி வரும் பவளப்பாறைகளை வெட்டி எடுக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வனத்துறை சட்டப்படி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால், ராமேஸ்வரம் பகுதியில் பவளப்பாறைகளை வெட்டியெடுக்கும் சமூக விரோதிகள் அவற்றை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களிடம் மிதக்கும் கல், ராமர் கடலில் பாலம் கட்டுவதற்கு பயன்படுத்திய கல் என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர். சில இடங்களில் இந்த கற்களை தண்ணீரில் மிதக்கவிட்டு வேடிக்கை காட்டி மோசடி பேர்வழிகள் பணம் பறித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் தமிழக வனத்துறை, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பாதுகாப்பு வனத்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் சுற்றுலாப்பயணிகளிடம், பவளப்பாறைகளை விற்றதாக 7 பேரை மத்திய கடல்வாழ் உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் பிடித்தனர்.  பாம்பன் அக்காள்மடத்தில் உள்ள தமிழக வனத்துறை அலுவலகத்தில் அவர்களிடம், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Breaking ,coral reefs ,beach ,Dhanushkodi , Breaking ,coral reefs , Dhanushkodi beach
× RELATED மாமல்லபுரத்தை தொடர்ந்து...