×

அடையாறு ஆற்றில் கெமிக்கல் கழிவு கலப்பதை தடுக்க மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஆய்வு குழு

சென்னை: சென்னை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கெமிக்கல் கழிவு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை அடையாறு ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படுகின்றன. இதனால் அடையாற்றின் நீர் மாசுப்பட்டு கடலில் கலக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அடையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமீறி செயல்படுவோர் அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, அடையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சென்னை மாகநராட்சி கமிஷனர் தலைமையில், மாவட்ட கலெக்டர், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர், கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை மே 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Inspection Committee ,Corporation Commissioner ,Adyar River Inspection Committee ,Adyar River , Inspection Committee headed by Corporation Commissioner, Chemical Waste Mixing , Adyar River
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...