×

ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி

தாக்கா: ஜிம்பாப்வே அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 265 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பிரின்ஸ் 64, கேப்டன் கிரெய்க் எர்வின் 107, ரெஜிஸ் சகாப்வா 30 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் அபு ஜாயித், நயீம் ஹசன் தலா 4, தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தமிம் 41, ஷான்டோ 132, தாஸ் 53, முஷ்பிகுர் ரகிம் 203* ரன் (318 பந்து, 28 பவுண்டரி) விளாசினர். இதைத் தொடர்ந்து, 295 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 189 ரன்னுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் எர்வின் 43, டிமிசென் மருமா 41, சிக்கந்தர் 37, சகாப்வா 18, பிரெண்டன் டெய்லர் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் நயீம் ஹசன் 5, தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் கைப்பற்றினர். முஷ்பிகுர் ரகிம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி சில்ஹெட்டில் மார்ச் 1ம் தேதி நடக்கிறது.

Tags : Zimbabwe ,Bangladesh ,win test series , Zimbabwe ,win Test series, Bangladesh
× RELATED சில்லி பாயின்ட்…