×

எம்டிஆர் கட்டணம் ரத்து செய்ததால் வங்கிகள், யுபிஐ நிறுவனங்களுக்கு 2,000 கோடி வரை இழப்பு அபாயம்

* அரசின் முடிவால் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வேட்டு

புதுடெல்லி: எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்ததால், வங்கிகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை மூலம் வருவாயை நம்பியுள்ள நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த இழப்பு 1,800 கோடி முதல் 2,000 கோடி வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு கடும் பண தட்டுப்பாடு ஏற்பட்டதால் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. இதன்பிறகு மொபைல் மூலம் பரிவர்த்தனை செய்ய, யுபிஐ அடிப்படையிலான பீம் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் அடிப்படையில், பல்வேறு வங்கிகள் யுபிஐ பரிவர்த்தனை வசதியை அளித்தன. மேலும், போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனை வசதியை வழங்குகின்றன. கார்டு பரிவர்த்தனை மற்றும் யுபிஐ பரிவர்த்தனை மூலம் கடைகளில் பணம் செலுத்தும்போது, கடைக்கார்கள் வங்கிக்கு வணிக தள்ளுபடி கட்டணம் (எம்டிஆர்) செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பெறும் வங்கிகள், இதில் ஒரு பகுதியை, டிஜிட்டல் பரிவர்த்தனையை வழங்கும் பிற வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதுபோல், யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைக்கு, இதனை நிர்வகிக்கும் தேசிய பண பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) தனக்குரிய பங்காக ஒரு கட்டணத்தை பெற்றுக்கொள்ளும்.
மேற்கண்ட வகையில் பண பரிவர்த்தனை வசதி அளிக்கும் நிறுவனங்களுக்கு, எம்டிஆர் கட்டணம்தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை, கடந்த ஆண்டு அக்டோபரில் முதன் முறையாக 100 கோடியை தாண்டியது.

இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், எம்டிஆர் கட்டணத்தை ரத்து செய்தது. இது கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. பில் தொகைக்கு ரொக்கமாக பெற்றுக்கொள்ளும் கடைக்காரர்களை யுபிஐ பரிவர்த்தனைக்கு இழுக்க வேண்டும் என்பதும் இந்த அறிவிப்பின் பிரதான நோக்கம். ஆனால், மத்திய அரசின் இந்த முடிவால் டிஜிட்டல் பரிவர்த்தனையால் வரும் வருவாயை நம்பியிருந்த கூகுள் பே, போன் பே போன்ற நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இழப்பு 1,800 கோடி முதல் 2,000 கோடி வரை இருக்கும். இதில் ரூபே கார்டு பரிவர்த்தனையால் கிடைக்க வேண்டிய தொகை 1,000 கோடி யுபிஐ பரிவர்த்தனையால் கிடைக்க வேண்டிய தொகை ₹800 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேசிய பண பரிவர்த்தனை கழகத்துக்கு வங்கிகள் அனுப்பிய கடிதத்தில், எம்டிஆர் கட்டணம் ரத்து செய்ததால், டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பிற வங்கிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை செலுத்த இயலவில்லை என தெரிவித்துள்ளது. ரூபே கார்டு மற்றும் யுபிஐ தொடர்பான டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியுள்ள வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்குதான் இந்த பாதிப்பு. மாஸ்டார், விசா கார்டு பரிவர்த்தனைக்கு இந்த கட்டண ரத்து பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

* யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை, கடந்த ஆண்டு அக்டோபரில் முதன் முறையாக 100 கோடியை தாண்டியது.
* போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனை வசதியை வழங்குகின்றன.
* டிஜிட்டல் பரிவர்த்தனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், எம்டிஆர் கட்டணத்தை ஜனவரி 1ம் தேதியில் ரத்து செய்துள்ளது அரசு.
* டிஜிட்டல் பரிவர்த்தனையால் வரும் வருவாயை நம்பியிருந்த கூகுள் பே, போன் பே போன்ற நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Banks ,companies ,UBI ,MTR ,cancellation ,UBIs , Banks and UBIs risk loss , Rs 2,000 crore ,cancellation of MTR fees
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...