×

தமிழகத்தில் காலியாக உள்ள 6 எம்பி பதவிகளுக்கு மார்ச் 26ல் தேர்தல்: பதவியை பிடிக்க அதிமுகவில் போட்டி

புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள 6 எம்பி பதவிகள் உட்பட 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 26ம் தேதி நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட 17 மாநிலங்களில் 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது. தமிழகத்தை பொறுத்த வரை திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன்,  அதிமுகவின் விஜிலா சத்யானந்த், முத்து கருப்பன், கே.செல்வராஜ் மற்றும் சசிகலா புஷ்பா (சமீபத்தில் பாஜவுக்கு தாவினார்) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது.இதையொட்டி, 55 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறும். மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மார்ச் 16ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை. மார்ச் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் மார்ச் 26ம் தேதி அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாநிலங்களை தேர்தலைப் பொறுத்தவரையில், அந்தந்த மாநில எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் காலியாக உள்ள எம்பி பதவிகளை பொறுத்து வெற்றி பெறுவதற்கான வாக்கு  எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். 234 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில், 6 எம்பி பதவிகள் காலியாக உள்ளதால், போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற 34 வாக்குகளை பெற வேண்டும்.இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக கட்சிகள் தலா 3 எம்பி பதவிக்கு போட்டியிட முடியும்.தமிழகத்தில் மொத்த மாநிலங்களவை எம்பிக்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதில், அதிமுக 10, திமுக 4, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் தலா ஒரு எம்பிக்களை கொண்டுள்ளன. திமுக சார்பில் ஒரு எம்பி பதவி மட்டுமே காலியாகிறது. அதே  சமயம், இந்த தேர்தல் மூலம் 3 எம்பிக்கள் கிடைக்கின்றனர். இதனால், திமுகவின் மாநிலங்களவை எம்பிக்கள் பலம் 6 ஆக அதிகரிக்கும். அதிமுக தரப்பில் 4 எம்பிக்கள் பதவிக்காலம் முடிகிறது. 3 எம்பிக்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைப்பார்கள் என்பதால் அதன் பலம் 9 ஆக குறையும். அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சிக்குள் எம்பி பதவியை பிடிக்க இப்போதே கடும் போட்டி நிலவுகிறது. மூத்த தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்க போட்டா போட்டி போடுவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

பாஜ.வுக்கான பலம் சரியும்; காங்.குக்கு சரியும் ஆனா...
மக்களவையில் பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் பாஜ கட்சிக்கு மாநிலங்களவையில் 239 உறுப்பினர்களில் 82 உறுப்பினர்களே உள்ளனர். மாநிலங்களவையில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்த  ஆதரவுக்கான பெரும்பான்மை பலம் பாஜவுக்கு இல்லாததால், அதிமுக, ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் உள்ளிட்ட ஆதரவு கட்சிகளின் உதவியுடன் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. இந்தநிலையில் தற்போது காலியாக உள்ள 55 எம்பி  பதவிகளில் பாஜ 18, காங்கிரஸ் 11, மற்றவை பிற கட்சிகள் கொண்டுள்ளன. காங்கிரசுக்கு 46 எம்பிக்கள் உள்ளனர். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜ சரிவை சந்தித்ததால் அதன் விளைவு மாநிலங்களவை தேர்தலில்  எதிரொலிக்கும்.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 7 எம்பி பதவிகளில் பாஜ, தேசியவாத காங்கிரஸ் தலா 2, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு எம்பிக்களை கொண்டுள்ளன. இதில், மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் ஆட்சி  அமைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களில் பெரும்பாலான பதவிகளை பெற வாய்ப்புள்ளது. 5 எம்பிக்களுக்கான தேர்தல் நடக்க உள்ள பீகாரிலும் பாஜ பலம் சரிய வாய்ப்புள்ளது. ஆனாலும், பாஜ பலம் சரிவது பெரிய அளவில் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை தேர்தலில்  பாஜ.வுக்கு 18ல் 13 எம்.பி.க்கள் பதவி கிடைக்கும். காங்கிரஸ் கட்சியை 11ல் 10 எம்.பி. பதவிகள் கிடைக்கும் என்று தேர்தல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : MPs ,elections ,Tamil Nadu ,Contest ,AIADMK , Tamil Nadu,posts,Contest ,AIADMK
× RELATED நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பிஏக்களுக்கு தடை