×

மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை தீவிரம் 1,500 பவுன் நகைகள் கொள்ளை போன வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை: ‘மொத்த சேமிப்பும் போச்சே’ கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்

பல்லடம்: பல்லடத்தில்1,500 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வங்கியை வாடிக்கையாளர்கள் 2வது நாளாக நேற்றும் முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் கும்பலை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் பாரத  ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இங்கு, கடந்த  சனிக்கிழமையன்று நள்ளிரவு கொள்ளை கும்பல் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது. ஆனால், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம்  ஊழியர்கள் வந்து பார்த்தபோதுதான் பின்புற ஜன்னலை உடைத்து லாக்கரை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தெரியவந்தது.வெல்டிங் மெஷின் மூலம் மொத்தமுள்ள 116 லாக்கர்களில் 31 லாக்கரை மட்டுமே கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். அதில் இருந்த சுமார் 1,500 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். அத்துடன், வாடிக்கையாளர்களின் டெபாசிட்  பணம் ரூ.18.50 லட்சத்தையும் சுருட்டிச்சென்றனர். கொள்ளையர்கள், கைகளால் எடுத்துச்செல்லக்கூடிய சிறிய அளவிலான வெல்டிங் மெஷின் மூலம் வங்கி லாக்கரை   துளையிட்டுள்ளனர். வங்கி உள்ளே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி  கேமராக்களை உடைத்துவிட்டு மெமரி கார்டை எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்தநிலையில், லாக்கரில் ைவத்த நகைகளை பறிகொடுத்த வாடிக்கையாளர்கள் சுமார் 50 பேர் நேற்று இரண்டாவது நாளாக வங்கி முன் திரண்டனர். வங்கியை முற்றுகையிட்டு, நகைகளை திருப்பிக்கேட்டு வங்கி அதிகாரிகளிடம்  வாக்குவாதம் செய்தனர். பெண்கள் பலர், எங்க மொத்த சேமிப்பும் போச்சே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர்  தாராபுரம் ரோட்டில் அமர்ந்து நேற்று மதியம் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  இதற்கிடையில் கொள்ளை நடந்த இடத்தை கோவை சரக டிஐஜி கார்த்திகேயன், திருப்பூர் எஸ்.பி. திஷா மிட்டல் ஆகியோர் நேற்று இரண்டாவது நாளாக பார்வையிட்டனர். கொள்ளை நடந்த வங்கிக்கு  அருகேயுள்ள வீடுகள்,  தொழிற்கூடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி  கேமரா பதிவுகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் 2 பேரின் உருவம் மட்டும் பதிவானது தெரியவந்தது. இந்த கொள்ளையில் 6 பேர் கும்பல் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொள்ளை கும்பலை பிடிக்க, எஸ்.பி. திஷாமிட்டல் தலைமையில், 2  டி.எஸ்.பி.க்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 6 தனிப்படை   அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

வடமாநில கும்பலா?
இக்கொள்ளையில்  ஈடுபட்டது வடமாநில கும்பலா? அல்லது திருச்சி நகைக்கடை  கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் கூட்டாளிகளா? என தெரியவில்லை. தற்போது முருகன்  சிறையில் இருந்தாலும், வெளியே உள்ள அவனது  கூட்டாளிகள் இக்கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Customers ,bank robbery ,mystery gang ,jewelers ,gang , capture, mystery gang,jewelery , women , savings
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...