×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு: இறுதி வாக்காளர் பட்டியல்படி தயாரானது

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த 9 மாவட்டங்களில் மூன்று மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மேலும் வார்டு மறுவரையறை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தப் பணிகள் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வார்டு வரையறை ெதாடர்பான அரசாணை வெளியிடப்படும்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் ெசய்துவருகிறது. இதன்டி கடந்த 14ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை அமைப்பது தொடர்பாக கடந்த வாரம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் 22ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,200 வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் ஒரு வாக்குச் சாவடியும், 1,200 முதல் 2,400 வரை வாக்காளர்கள் உள்ள பகுதியில் இரண்டு வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1,400 முதல் 2,800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2,800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக தயாரிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் இந்த பட்டியல் மீதான கருத்துகளை தெரிவிக்கலாம். இவற்றை பரிசீலனை செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும். இதன்பிறகு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தொடங்கும். இந்த பணிகள் முடிந்து ஏப்ரல் இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, மே மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளில் 12 ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகளும், 121 நகராட்சிகளில் 7386 வாக்குச்சாவடிகளும், 528 பேரூராட்சிகளில் 9288 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Urban Local Elections ,Draft , Urban Local Elections, New Draft, Ballot List, Release Today
× RELATED நாட்டிலேயே முதல்முறை… மாநில மகளிர்...