வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும், பாஜக மாநிலத் தலைவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கெளதம் கம்பீர்

டெல்லி: பாஜகவின் கபில் மிஷ்ரா வடகிழக்கு டெல்லியில் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கெளதம் கம்பீர், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு ஒரு காவலர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஷ்ரா கடந்த சனிக்கிழமை அன்று, சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களை டெல்லி போலீஸ் அப்புறப்படுத்தவில்லை என்றால், தானும் தன்னுடைய ஆதரவாளர்களும் அந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, ’ஆகவேண்டியதைச் செய்வோம்’ என கருத்து தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ஆதரவாளர்களை மறுநாள் மாலை 3 மணிக்கு மெளஜ்பூர் பகுதியில் ஒன்றுகூடுமாறு ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார். ஜாஃப்ராபாத், மெளஜ்பூர் போன்ற பகுதிகளில் எதிரெதிரே சிஏஏ ஆதரவாளர்களும், சிஏஏ எதிர்ப்பாளர்களும் போராட்டம் நடத்தினர். ஒருகட்டத்தில் அது பெரும் வன்முறையாக வெடித்தது. இதற்கு கபில் மிஷ்ராவே காரணம் என ஆம்ஆத்மி எம்எல்ஏ அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், ”கபில் மிஷ்ராவோ அல்லது வேறு யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சார்ந்தவரானாலும், வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஏதேனும் பேசினால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories:

>