தேனியில் சூடு பறக்கும் இட்லி மாவு வியாபாரம்

தேனி: தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களில் இட்லி, தோசை மாவு விற்கும் தொழில் சூடு பிடித்துள்ளது. தேனியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். முழுக்க, முழுக்க கிராமிய கலாச்சாரம் கொண்ட தேனி மற்றும் அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், வடபுதுப்பட்டி, குன்னுார், அரண்மனைப்புதுார் ஆகிய கிராமங்களில் ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கம் மக்களிடம் பெரிய அளவில் இல்லை. இதனால் தேனியில் ஓட்டல் தொழில் பெரிய அளவில் வளரவில்லை. தேனியில் உள்ள ஓட்டல்கள் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகளை நம்பியே நடத்தப்படுகின்றன. தேனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் புளிக்கொட்டரை, கடைகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். வேலை முடிந்து வீடு திரும்ப இரவு நேரமாகி விடுவதால், அதன் பின்னர் இரவு நேர உணவுக்கு டிபன் தயாரிப்பது முடியாத காரியமாக உள்ளது. ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உள்ளதால், உணவகங்களில் சாப்பிட யாரும் விரும்புவதில்லை. இதனால் வீதிகள்தோறும் விற்கப்படும் இட்லி மற்றும் தோசை மாவை அதிகளவில் வாங்கி டிபன் தயாரிக்கின்றனர்.

இந்த சூழலை பயன்படுத்தி குடும்ப பெண்கள் ஏராளமானோர் இட்லி, தோசை மாவு அரைத்து காலை, மாலை நேரங்களில் விற்பனை செய்கின்றனர். இந்த தொழிலில் தேனியில் மட்டும் சுமார் 700 பெண்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிலர் இட்லி, தோசை மாவுகளை அண்டாவில் வைத்து தலைச்சுமையாக தெருத்தெருவாக சென்று விற்பனை செய்கின்றனர். ஒருசிலர் குறிப்பிட்ட இடங்களில் வைத்து மாவு விற்பனை செய்கின்றனர். இது குறித்து மாவு அரைத்து விற்கும் பெண்கள் சிலர் கூறியதாவது: இட்லி மாவு விற்பனை நன்றாக உள்ளது. குறிப்பாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு மாவு வழங்க முடியவில்லை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலையில் வைக்கும் சாம்பாருடன் இரவு நேர டிபனுக்கு ஏதாவது ஒரு சட்னி மட்டும் தயாரிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மதியம் தயாரிக்கும் அசைவ உணவு குழம்புகளை இரவு நேர டிபனுக்கு வைத்து கொள்கின்றனர். இதனால் இந்த 3 நாட்களில் இட்லி, தோசை மாவு தேவை அதிகமாக உள்ளது. பலர் பெரிய எந்திரங்களை பயன்படுத்தி மாவு அரைத்து கேரளாவில் உள்ள ஓட்டல்களுக்கு தினமும் விநியோகம் செய்கின்றனர். இவ்வாறு கூறினர்.

Related Stories:

More
>