×

மீண்டும் பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்: ஜெர்சி, டோட்லா நிறுவனங்களை தொடர்ந்து ஆரோக்கியா, திருமலா பால் விலை உயர்வு!

சென்னை: தமிழகத்தில் பால் விற்பனை செய்து வரும் ஹேட்சன், திருமலா, ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள், கடந்த மாதம் 20ம் தேதி பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தின. அதேபோல் தயிரின் விலையையும் உயர்த்தின. பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளான நிலையில், தற்போது மீண்டும் தனியார்  பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. இம்முறை பால் கொள்முதல் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களுக்கான விலையேற்றத்தால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமலா பால் நிறுவனம் ஒரு லிட்டர் பால் விலையை 4 ரூபாய் உயர்த்தி 64 ரூபாயாக்கியுள்ளது. 62 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் டோட்லா டெய்ரி பால் 2 ரூபாய் உயர்ந்து, 64 ரூபாயாகி உள்ளது. ஜெர்சி பால் நிறுவனம் ஒரு லிட்டருக்கு 3 ரூபாயை உயர்த்தி 56 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.

அதேபோல் ஹேட்சன் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பால் விலையை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது. தயிரின் விலையையும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்தியாவில் இருந்து அதிகப்படியான பால் பவுடர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தான் பால் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் குமார் குற்றம் சாட்டியுள்ளார். தனியார் நிறுவனங்களின் பால் லிட்டர் விலை 50 ரூபாயை கடந்த நிலையில் தமிழக அரசின் ஆவின் பால் லிட்டருக்கு 43 ரூபாய்க்கு கிடைக்கிறது. அடிக்கடி அறிவிக்கப்படும் தனியார் பால்விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags : companies ,Jersey ,Todla , Milk Price, Private Companies, Jersey, Todla, Wellness, Tirumala Milk Price, Increase
× RELATED முத்திரையில்லா தராசு பயன்பாடு 36 நிறுவனங்களுக்கு அபராதம்