×

கோவில்பட்டி அருகே 18ம் படி கருப்பசாமி கோயிலில் 21 அரிவாள் மீது 136 முறை வலம் வந்து அருள்வாக்கு கூறிய பூசாரி

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் 65ம் ஆண்டு கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு ராஜகணபதிக்கு கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு கோயிலில் உள்ள 18 படிகளுக்கும் படி பூஜைகள், இரவு 8.30 மணிக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரையில் வலம் வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து அதிகாலை 12.30 மணிக்கு கோயில் பூசாரி கருப்பசாமி, 21 அரிவாள்களில் 68 முறை நடந்து சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். நேற்று காலை 7 மணிக்கு 21 அக்னிசட்டியுடன் பவனி வருதலும், 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டும் சுவாமியை வழிபட்டனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு பழ பூஜைகள் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு உலக மக்கள் நலன் வேண்டியும், மழை பொழிந்து வசாயம்  செழிக்கவும் பூசாரி கருப்பசாமி, மீண்டும் 21 அரிவாள்கள் மீது 68 முறை வலம் சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார்.

பின்னர் கோயில் பூசாரி கருப்பசாமி மகன் காமராஜ் மீது 68 கிலோ மிளகாய் வத்தல் அபிஷேகமும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், தொழிலதிபர்கள் திலகரத்தினம், ரத்தினராஜ், ஆபிரகாம் அய்யாத்துரை, வள்ளுவன், மகாலட்சுமி குரூப்ஸ் அறக்கட்டளை சந்திரசேகர், நீதிராஜன், நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் சண்முகராஜா, சென்னை தொழிலதிபர் வினோத் -பூரணி மற்றும் கோவில்பட்டி, இளையரசனேந்தல் உட்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

Tags : priest ,eve ,temple ,Kovilpatti ,Karuppasamy , Kovilpatti, Karuppasamy temple, priest
× RELATED கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு