×

கூடலூர் பகுதியில் தடை புகையிலை விற்பனை தாராளம்: போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்

கூடலூர்: கூடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி அருகே உள்ள கடைகளில், மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். புகையிலை, பெவிகால், ஒயிட்னர் ஆகிய வெளியில் தெரியாத போதை பொருட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீப காலமாக அடிமையாகி வருகின்றனர். புற்று நோய் வருவதற்கு புகையிலை காரணம் என தெரிந்தும், அதன் விற்பனை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

‘18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பாக்கு மற்றும் புகையிலை விற்பது சட்டப்படி குற்றம். மீறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் குட்கா, போதைப் பாக்கு, புகையிலை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் சுற்று கிராமங்களின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.8 விலையுள்ள இந்த போதை புகையிலை 25 ரூபாய்க்கு விற்பதாக புகார் கூறுகின்றனர். கூடலூரில் மெயின் பஜார், மெயின்ரோடுகளில் உள்ள ஒரு சில கடைகளிலும், கருநாக்கமுத்தன்பட்டி பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஏராளமானோர் இதற்கு அடிமையாகி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என கூறுகின்றனர்.

போலீசார் அவ்வப்போது புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்தாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை. எனவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதை பொருட்கள் பள்ளி அருகே விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதியில் நிற்கும் பள்ளி படிப்பு
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியின் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக மது, கஞ்சா, போதை மாத்திரை, தடைசெய்யப்பட்ட புகையிலை, பாக்கு போன்ற போதை வஸ்துக்கள் விற்பனை செய்கின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள் பலரும் மது மற்றும் புகையிலை ஆகிய போதைக்கு அடிமையாகி பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில், பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன், கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு மனு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags : School ,Koodalur: School , Liberation ,banned tobacco,Koodalur,School students addicted
× RELATED தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...