×

பன்னாட்டு விமான நிலைய டெர்மினல் முழு பயனின்றி வெறிச்சோடுகிறது தூங்காநகரில் 24 மணிநேர விமான சேவைக்கு விடிவு பிறக்குமா?: புதிய ஆலோசனை குழு முதன்முறையாக இன்று கூடுகிறது

மதுரை:  தூங்கா நகரில் பன்னாட்டு விமான நிலையம் இருந்தும் 24 மணிநேர விமான சேவைக்கு விடிவு எப்போது பிறக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இங்கு ரூ. 130 கோடியில் நவீன டெர்மினல் கட்டி 10 ஆண்டுகளாகியும் முழு பயனின்றி வெறிச்சோடுகிறது. இந்த சூழலில் விமான நிலைய புதிய உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை குழு முதன்முறையாக இன்று கூடுகிறது.  மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தை எட்டவில்லை என்றாலும் பன்னாட்டு விமான நிலையமாக உயர்ந்துள்ளது. ரூ.130 கோடியில் நவீன டெர்மினல் உருவாக்கி 10 ஆண்டுகளாகின்றன. இதுவரை இலங்கை, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
 
இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இங்கிருந்து  பூ. காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஆனால் இரவு 11 மணிக்கு பிறகு விடிந்து, காலை 6 மணி வரை வரை விமானங்கள் கிடையாது. தூங்கா நகர் என்ற பெருமைக்குரிய நகரில் ரயில், பஸ் நிலையங்கள் விடிய விடிய இயங்குகின்றன.  அதேபோல் விமான நிலையமும் விடிய விடிய இயக்கப்பட வேண்டும், 24 மணி நேரமும் விமான சேவை உருவாவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் விமான பயணம் என்பது பண வசதிபடைத்தவர்கள், உயர்அதிகாரிகளுக்கு மட்டுமே என்ற நிலை மாறி நடுத்தர, ஏழை மக்களும் பயணிக்கும் பரிணாம வளர்ச்சி எட்டி உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும்  வேலை செய்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அவர்கள் குடும்பத்தோடு விமானங்களில் பறக்கிறார்கள். விடிய விடிய விமான சேவை இருந்தால், பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிரிக்க வாய்ப்புள்ளது. மதுரை நகரின் சுற்றுலாவும் வளர்ச்சி அடையும்.பன்னாட்டு விமானங்கள் இயக்குவதற்கு வசதியாக ரூ.130 கோடியில் 500 பயணிகளை கையாளும் வகையில் 17 ஆயிரத்து 560 சதுர மீட்டர் பரப்பில் பிரமாண்ட தோற்றத்துடன் நவீன டெர்மினல் கட்டப்பட்டு, 2010ல் திறக்கப்பட்டது. அதிக எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் கட்டப்பட்ட இந்த டெர்மினல் கட்டி 10 ஆண்டுகளாகியும் முழு பயன் அளிக்காமல் ஏமாற்றமளிப்பது அதிர்ச்சிக்குரியது. அதிக அளவில் விமானங்கள் வர தயாராக இருந்தும், 24 மணி நேர சேவை கிட்டவில்லை. அதற்கு முக்கிய காரணம் மதுரைக்கு விமானங்கள் இயக்க தயாராக இருக்கும் பல்வேறு நாடுகளுடன் இரு நாட்டு விமான சேவை ஒப்பந்தத்தில் மதுரையை மத்திய அரசு சேர்க்காமல் இழுத்தடிக்கிறது.

இதனால் எதிர்பார்த்த விமானங்கள் வராமல், நவீன டெர்மினல் பாதிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் வெறிச்சோடுகிறது. அதேநிலை நீடித்தால் வர்த்தக ரீதியில் விமான நிலையத்திற்கு பின்னடைவை உருவாக்கும் சிக்கல் உள்ளது.விமான நிலைய வளாகத்தில் தரமான ஓட்டலோ. புறக்காவல் நிலையமோ, அடிப்படை வசதிகளோ இல்லை.இந்த சூழலில் விமான நிலைய புதிய உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை குழு பிப்ரவரி 25ல் (இன்று) மாலை 5 மணிக்கு விமான நிலையத்தில் கூடுகிறது. எம்.பி. மாணிக்கம்தாகூர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் ஏர்இந்தியா மேலாளர், மதுரை எம்.பி் வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், மதுரை கலெக்டர் உள்ளிட்ட தொழில் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இதில் முக்கிய ஆலோசனைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான ஓடுபாதை விரிவாக்கம் இழுத்தடிப்பு
* சர்வதேச அந்தஸ்து அடைய விமான ஓடுதளம் தற்போதுள்ள 7,500 அடியில் இருந்து 12,500 அடியாக விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளது. இதற்காக ஆர்ஜிதம் செய்து முடிக்கப்பட்ட 616 ஏக்கர் நிலத்தை விமான ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்காமல் 8 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது. இதற்கும் ஆலோசனை கூட்டத்தில் தீர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : International Airport,Terminal,Fails, Fail
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...