மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த முடிகண்டநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உண்மை நிலையை நீதிமன்றத்திற்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய நகராட்சியாக உள்ளது. 150 ஆண்டுகளைக்கடந்த இந்த நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள முடிகண்டநல்லூர் பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. பின்னர் குழாய் வழியாக மயிலாடுறைக்குக் கொண்டு சென்று கிட்டதட்ட 12 ஆயிரம் வீடுகளுக்கும் தெருவிற்குத்தெரு பொதுக்குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் நகராட்சி மக்களுக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் இரண்டு மணிநேரம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் மணல்குவாரிகள் முடிகண்டநல்லூர் பகுதியில் செயல்பட துவங்கியபோது திடீரென்று நீர்மட்டம் குறைந்தது. மணல்குவாரிகள் 25 அடியிலிருந்து 30 அடிஆழத்தில் மணலை தோண்டி எடுத்ததால் குடிநீர் சேகரிக்கும் தொட்டிக்கு தண்ணீர்வரத்து குறைந்தது.
இந்த குடிநீர் சேகரிப்பு திட்டம் என்பது 100 அடி 200 அடி ஆழத்தில் போர்வெல் போட்டு அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து நீர்த்தேக்கத்தொட்டியில் சேகரிக்கும் அமைப்பு அல்ல. கிணற்றை சுற்றி 30 அடி ஆழத்தில் பக்கவாட்டில் பைப்புகள் அமைத்து அந்த பைப்பில் ஊறும் தண்ணீரை குழாய் மூலம் கிணற்றிற்கு கொண்டு செல்லப்பட்டு சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நீரேற்று நிலையம் மூலம் அனுப்பப்படும் அமைப்பாகும்.
குடிநீர் கிணற்றில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளினாலே கிணற்றுக்கு வரும் தண்ணீர் குறைந்து விடும். இதனால்தான் மயிலாடுதுறை நகருக்குத் தண்ணீர் முறையாகக் கொடுக்க முடியாமல் மாலை நேரத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டனர். தற்பொழுது காலையில் ஒருவேளை மட்டும் அதுவும் 2 மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது முடிகண்டநல்லூருக்கும் முட்டம் பாலத்திற்கும் இடையில் ஏற்கனவே மணல் குவாரி அமைத்திருந்த இடத்திற்கும் மேற்கே, மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் தேக்கத்தொட்டிக்கும் 500 மீ. பக்கத்தில் மணல்குவாரி துவக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் நடுவில் லாரி செல்வதற்குப் பாதை அமைத்து நாள் ஒன்றுக்கு 300 லாரிகள்முதல் 600 லாரிகள் வரை மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஒருசில பகுதிகள் பள்ளமாகி மயிலாடுதுறை நகராட்சிக்கு தண்ணீர் கிடைக்கும் ஆதாரம் அடியோடு நாசமாகி வருகிறது. மயிலாடுதுறை நகர மக்களுக்கு கொள்ளிடம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். ஏற்கனவே 2018ல் ஆரம்பிக்கப்பட்ட மணல் குவாரியில் தினந்தோறும் மணல் திருட்டு நடைபெற்று தனியார் கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். இதனால் குவாரியில் மணல் அள்ளிப்போடும் குத்தகையை எடுத்தவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருசில மாதங்கள் மணற்குவாரி மூடப்பட்டது. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மணற்குவாரி குத்தகையை எடுத்து விடிய விடிய மணலை அள்ளிச்சென்று கரையேற்றி ராதாநல்லூர் பகுதியில் கிடங்கில் சேமித்து லாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். 2 யூனிட் மணலுக்கு பில் போடப்பட்டாலும் 2.5 யூனிட் மணலை அள்ளிப்போட்டு லாரி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை வசூல் வேட்டை நடைபெறுகிறது. இவ்வளவு லாபம் கொடுக்கும் தொழிலுக்கு சிக்கல் வராமல் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளைப் பார்த்து கொள்கின்றனர்.
தற்போது மணற்குவாரி நடத்தும் இடத்திற்கு அருகில்தான் குமாரமங்கலம் ஆதுனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை கட்ட வேலை நடைபெற்று வருகிறது, அந்த இடத்திற்கு அருகில் தான் மணற்குவாரி அமைத்து சகட்டுமேனிக்கு மணலை 20 அடி ஆழம்வரை பொக்ளைன் இயந்திரம் மூலம் தோண்டி அள்ளிச்செல்கின்றனர். இதனால் தடுப்பணை கட்டுவதில் பிரச்னை ஏற்படும். மேலும் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் மணற்குவாரியால் மணல் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டாலும் கண்ணில் தெரியும் மணலை பொக்ளைன் எந்திரம் மூலம் தோண்டி வெளியே எடுத்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். அரசே குவாரியை நடத்துவதாக கூறினாலும் 90 சதவீதம் தனியார் தான் இதை நடத்தி வருகின்றனர். இந்த மணல் குவாரியை ஒட்டித்தான் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் எடுக்கும் தொட்டிகள் உள்ளது. இந்த மணற்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வந்தால் மயிலாடுதுறை நகருக்கு கிடைக்கும் குடிநீர் அடியோடு நின்று விடும். நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக ஆய்வு மெற்கொண்டு குடிநீர் எடுக்கும் பகுதி பக்கமே மணல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த அபாயம் குறித்து 2018ம் ஆண்டே மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் நாகை மாவட்ட ஆட்சியருக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்து மணற்குவாரிக்கு தடைகோரியிருந்தது, மயிலாடுதுறை நகராட்சியின் ஆட்சேபனையை தூக்கிக் குப்பையில் போட்ட நாகை மாவட்ட நிர்வாகம் மணற்குவாரிக்கு அனுமதி அளித்து விட்டது. இந்நிலையில் தற்போது கடலங்குடியை சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இந்த மணற்குவாரியை தடைசெய்ய கோரியிருந்தார் இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது குவாரிகள் நடத்துவதால் தடுப்பணை கட்டும் பணி கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாகக்குறைந்துவிடும் என்று வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு மார்ச் 13ம் தேதிக்குள் பதிலளிக்க நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டனர். பொதுப்பணித்துறையினர் சமூக அக்கறையுடன் செயல்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை, அவர்களால்தான் மணற்குவாரியில் மாபெரும் முறைகேடு நடைபெற்று வருகிறது,
தடுப்பணை கட்டுவதற்கும் மணற்குவாரி நடத்தும் இடத்திற்கும் இவ்வளவு தூரம் தடுப்பணை கட்டுமான பணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பதில் எழுதி விடுவார்கள். எனவே கொள்ளிடம் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக முடிகண்டநல்லூர், ராதாநல்லூர், பாப்பாக்குடி, ராஜசூரியன்பேட்டை, சித்தமல்லி, சித்தமல்லி 2, பனங்காட்டாங்குடி, வடரெங்கம், மாதிரவேளுர், பட்டியமேடு பகுதிகளில் மணல்குவாரிகளை அடுத்தடுத்து அமைத்து இயற்கை வளத்தையே அழித்து விட்டனர். எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதியின் நிலைமையை சீர்தூக்கிப் பார்ப்பதுடன் எத்தனை ஊராட்சி ஒன்றியங்களுக்கு இப்பகுதி குடிநீர் அளித்து வருகிறது, 25 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் பகுதியில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் என்ன தற்பொழுது எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்று கணக்கிட்டு மயிலாடுதுறை கோட்டத்தில் எந்த இடத்திலும் கொள்ளிடம் ஆற்றில் மணற்குவாரி நடத்தக்கூடாது என்ற அளவிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* மயிலாடுதுறை நகருக்குத் தண்ணீர் முறையாகக் கொடுக்க முடியாமல் மாலை நேரத்தில் தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டனர்.
* தற்பொழுது காலையில் ஒருவேளை மட்டும் அதுவும் 2 மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.