×

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா: பள்ளிகளுக்கு விடுமுறை, கால்பந்து போட்டிகள் ரத்து...பீதியில் மக்கள்!

சியோல்: சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும், 150 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,600 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும், இந்த வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக, தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 893 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். டேகு நகரில் தான், அதிகமானோர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேற்று மட்டும், இரண்டு பேர் பலியாகினர். வைரஸ் வேகமாக பரவுவதால், தென் கொரியாவில் துவங்கவிருந்த சர்வதேச கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முகமூடிகளை வாங்குவதற்காக நீண்ட தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதால், தென் கொரியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொரோனா வைரஸ், சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : China ,South Korea ,Holidays ,schools ,coronavirus outbreak ,football matches , China, South Korea, corona virus, schools, holidays, football competition
× RELATED ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை...