×

கூட்டமாக படையெடுக்கும் யானைகள் மேய்ச்சல் நிலமானது அமராவதி அணை

உடுமலை: அமராவதி அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. வனப்பகுதியிலும் வறட்சி நிலவி வருவதால் தாகம் தணிக்கவும், அமராவதி அணையின் கரையோரம் வளர்ந்துள்ள புற்களை மேயவும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அணையின் கரையினில் மேய்கின்றன.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர்வசதி பெறுகின்றன.

அணையில் தற்போது 25 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. இது குடிநீர் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கோடை துவங்க உள்ளதால், நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை.
வறட்சி காரணமாக அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் புற்கள், செடி கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுமையான புற்களை தேடியும், தண்ணீர் குடிக்கவும் அமராவதி அணை நோக்கி வருகின்றன.

தினமும் மாலையில் சின்னாறு பகுதியில் உடுமலை- மூணாறு சாலையை கடந்து வரும் யானை கூட்டம், அமராவதி அணை பகுதியில் உள்ள அருகம்புல்களை மேய்கின்றன. பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு, இரவில் திரும்பி செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது அணை பகுதியை ஒட்டிய காட்டிலேயே முகாமிட்டுள்ளன. ஒரு யானை கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.இதேபோல, மான்களும், ஆடுகளும் அணைப் பகுதியில் மேய்கின்றன. இதனால் அமராவதி அணை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு அமராவதி அணை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


வனத்துறை எச்சரிக்கை
வனத்திலிருந்து மாலை நேரத்தில் வெளியேறும் யானைக் கூட்டம் அமராவதி அணையில் விடிய, விடிய குளித்து கும்மாளமிட்டு காலையில் அணையை விட்டு வெளியேறி மீண்டும் வனப்பகுதியை சென்றடைகிறது. உடுமலை- மூணார் சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் காட்டு யானைகள் சாலையோரம் நிற்பதை கவனித்து அதற்கு தொந்தரவு அளிக்காமல் சாலையை கடக்க வேண்டும். மேலும் செல்பி எடுப்பதாக கூறி காட்டு யானை கூட்டத்தின் அருகில் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.



Tags : Amaravati Dam , Amaravati Dam ,herd,large numbers,invading,elephants
× RELATED கோடை வெப்பம் அதிகரிப்பு அமராவதி அணை நீர்மட்டம் 46 அடியாக சரிவு