×

பல்லடம் அருகே ஜன்னலை உடைத்து புகுந்தனர் வங்கி லாக்கர்களில் துளையிட்டு நகை, பணம் துணிகர கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் தாராபுரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு வங்கியை பூட்டிவிட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கியை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த வங்கி லாக்கர் மற்றும் வாடிக்கையாளர் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின்படி காமநாயக்கன்பாளையம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வங்கியின் பின்புறமுள்ள ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் நுழைந்து லாக்கர்களை துளையிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் சிசிடிவி கேமராக்களை உடைத்து, ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது.  துளையிடப்பட்டதால் லாக்கர்களை சாவி மூலம் திறக்க முடியவில்லை. இதனால் எவ்வளவு பணம், நகை கொள்ளை போனது என கணக்கிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜாம் ஆன லாக்கர்களை திறப்பதற்காக கோவையில் உள்ள வங்கி தொழில்நுட்ப குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து லாக்கரை திறந்த பின்னரே கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரியவரும். வங்கியில் உள்ள 116 லாக்கர்களில் வாடிக்கையாளர்கள் பணம், நகைகளை வைத்திருந்தனர். இதில் 31 லாக்கர்கள் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட  வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அவர்கள் லாக்கர்கைள பார்வையிட மாலை 6  மணியளவில் அனுமதிக்கப்பட்டனர். வங்கி  லாக்கரில் 18 லட்சத்து 93 ஆயிரம்  வைக்கப்பட்டிருந்ததாக வங்கி மேலாளர் போலீசாரிடம் தெரிவித்தார். எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது என்பது கோவை  குழுவினர் வந்து லாக்கரை திறந்தால் மட்டுமே தெரிய வரும். எஸ்பி. திஷா மிட்டல், பல்லடம் டி.எஸ்பி முருகவேல் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளைச்  சம்பவத்தில் வடமாநில கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Jewel ,mystery gang ,Palladam , Palladam, banking, jewelry, money robbery, mystery gang, handwriting
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...