×

பழவேற்காடு ஏரியில் 2 பெண்கள் சடலம் மீட்பு : கொலையா? போலீஸ் விசாரணை

சென்னை: பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்து 2 பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர். அவர்களை யாராவது கொலைசெய்து ஏரியில் வீசினார்களா என விசாரிக்கின்றனர்.பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக நேற்று முன்தினம் மாலை திருப்பாலைவனம் போலீசாருக்கு பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் புகார் அளித்தார்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பாலைவனம் போலீஸ் எஸ்ஐ சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஏரிக்குள் மிதந்த பெண்ணின் சடலத்தை மீனவர்கள் உதவியுடன் கைப்பற்றினர். பின்னர், அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக மிதந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை ஏதேனும் கும்பல் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று சடலத்தை ஏரிக்குள் வீசிவிட்டு சென்றார்களா அல்லது காதல் தோல்வியால் அப்பெண் தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் தொடர்ந்து அப்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக பழவேற்காடு ஏரியில் மிதப்பதாக திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் மிதந்த அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்த இரண்டு பெண்கள் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : women ,Pulicat Lake , 2 women, body , Pulicat, investigating
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது