×

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் தொழிற்சாலைகள் தொடங்க தடை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டமுன்வடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி தாக்கல் செய்தார். இந்த சட்டத்துக்கு தமிழக கவர்னர் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

மேலும்,  நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட அரசாணையையும் தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க தடை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கலோலிகர் நேற்று வெளியிட்டுள்ள அரசிதழில் கூறி இருப்பதாவது: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதிகளில் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை.

ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு அலுமினிய உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு,  குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல்,  எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை
மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : plants ,delta area ,Government ,Agricultural Zone ,Tamil Nadu ,Methane Industries , Agricultural Zone, Delta Area, Hydrocarbon, Methane Industries, Prohibition, Government, Tamil Nadu Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...