×

சித்தூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற டிரைவருக்கு தூக்கு தண்டனை: மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

சித்தூர்: சித்தூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், குரபலகோட்டா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தங்களது 6 வயது மகளுடன் மதனபல்லி அடுத்த அங்கல்லு பகுதியில் நடந்த உறவினரின் திருமணத்திற்காக சென்றனர். மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி இரவில் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் நவம்பர் 7ம் தேதி காலை திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மதனபல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ரபியை கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீர்ப்பை தெரிந்து கொள்ள பொதுமக்கள் திரண்டதால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி முகமது ரபி சித்தூர் சிறையில் இருந்து மாவட்ட முதலாவது கிளை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட் ஹரிநாத், மாலை 4 மணியளவில் குற்றவாளி முகமது ரபிக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.

Tags : death ,Chittoor ,district court ,sentencing ,rape , 6 year old girl, rape, hanging, district court, sentencing
× RELATED சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும்...