×

அயோத்தியில் உபி அரசு ஒதுக்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தில் மசூதி, மருத்துவமனை கட்ட சன்னி வக்பு வாரியம் முடிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் கடந்த 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக கூறி அதை அவர்கள் இடித்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரபரப்பான தீர்ப்பளித்தது. அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்ட அனுமதியளித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் அயோத்தி நகருக்குள் மசூதி கட்டிக்கொள்ள சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு ஒதுக்கவும் உத்தரவிட்டது. ஆனால், அந்த இடத்தை ஏற்கக் கூடாது என பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சன்னி வக்பு வாரியத்தை வலியுறுத்தின. ஆனால் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும் என சன்னி வக்பு வாரியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி நடந்த உபி அமைச்சரவை கூட்டத்தில் அயோத்தியின் சோகாவல் பகுதியில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது.

இதுகுறித்து ஆலோசிக்க லக்னோவில் நேற்று, சன்னி வக்பு வாரிய கூட்டம், அதன் தலைவர் ஜூபார் பரூக்கி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு ஒதுக்கீடு செய்துள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு பின் பரூக்கி கூறுகையில், ‘‘மசூதி கட்ட மாநில அரசு ஒதுக்கியுள்ள இடத்தை ஏற்பது என முடிவு செய்துள்ளோம். அந்த இடத்தில் மசூதி, இந்தோ-இஸ்லாமிக் ஆராய்ச்சி மையம், ெபாது நூலகம், அறக்கட்டளை மருத்துவமனை உள்ளிட்டவை கட்டப்படும்’’ என்றார்.

Tags : Wakpu Board ,hospital ,land ,government ,Ayodhya ,UP ,Sunny Wakpu Board , Ayodhya, 5 acres of land, mosque, hospital, Sunny Wakpu Board, results
× RELATED பாகிஸ்தானில் குருத்வாராவை மசூதியாக...