×

ரேஷன் - ஆதார் இணைப்பால் பட்டினிச்சாவு ஏற்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் கடும் வாதம்

புதுடெல்லி: ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க சொல்லும் பிரச்னையால் தான் அதற்கான பொருட்கள் கிடைக்காமல் பட்டினிச் சாவு ஏற்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் நேற்று கடும் வாதம் முன்வைக்கப்பட்டது. பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமத்துவ சமுதாய உணவுக்கூடம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதில் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு உச்சபட்சமாக ₹10 லட்சம் அபராதமாக விதித்து கடந்த 17ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வழக்கை வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், கொயிலி தேவி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ரேஷன் பொருட்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால், உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் இறக்கும் சம்பவம் ஏற்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க சொல்வதுதான் காரணம்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தனது வாதத்தில், “இந்த விவாகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தற்போது வரை தமிழ்நாடு, நாகாலாந்து மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டும்தான் பதிலளித்துள்ளன” என வாதிட்டார்.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது வாதத்தில், “இந்த விவகாரத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் 15 சதவீதம்தான் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மீதமுள்ள 85 சதவீதத்தினர் குடும்ப அட்டை இருந்தும், அதற்கான பொருட்கள் கிடைக்காததால் பாதிப்படைந்து பட்டினியால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க சொல்வதுதான்” என கடுமையான வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த பிரச்னை தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு, அடுத்த 4 வாரத்தில் அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கூறி, வழக்கை அடுத்த 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court , Ration - Aadhaar, Supreme Court, Heavy Argument
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...