×

டெல்லியில் பயங்கர கலவரம் ஏட்டு உட்பட இரண்டு பேர் பலி : பதற்றம் நீடிக்கிறது

புதுடெல்லி: தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியின் பல  பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்கு  சில மணி நேரங்களுக்கு முன் ஜப்ராபாத் அருகே நேற்று மீண்டும் ஏற்பட்ட  கலவரத்தில் தலைமை காவலர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர். தேசிய  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த  இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில்,  முன்னாள் எம்எல்ஏவும், பாஜ பிரமுகரான கபில் மிஸ்ரா அழைப்பின் பேரில் அவரது  ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டு சிஏஏவுக்கு ஆதரவாக, சனிக்கிழமையன்று இரவு  மவுஜ்பூர் அருகே போராட்டம் நடத்த திரண்டனர். . அவர்களை போலீசார் சமரசம் பேசி அனுப்பி  வைத்தனர். ஆனால் நேற்று முன்தினம் மீண்டும் சிஏஏ ஆதரவாளர்கள்  திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பிற்கும் இடையே திடீர் மோதல்  வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டதால் அந்த இடம்  போர்களம் போன்று காட்சியளித்தது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார்  கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரக்காரர்களை துரத்தி அடித்தனர்.  பாதுகாப்பு கருதி ஜப்ராபாத் மற்றும் பாதர்பூர் மெட்ரோ நிலைய நுழைவு மற்றும்  வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டது.

நேற்று மீண்டும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு  மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது. இருதரப்பினரும்  கற்களை வீசி தாக்கி கொண்டனர். அங்குள்ள வாகனங்கள், வீடுகள் மற்றும்  கடைகளுக்கு தீ வைத்து எரித்தனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ஆட்டோக்கள் தீ  வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி  நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எனினும், இந்த கலவரத்தில், கோகுல்புரியில் உள்ள உதவி போலீஸ்  கமிஷனர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ரத்தன் லால் என்பவர்  கொல்லப்பட்டார். இவர் தவிர, சிவிலியன் ஒருவரும் தலையில் அடிப்பட்ட நிலையில்  கொல்லப்பட்டனர். பஜன்புராவில் கலவரக்காரர்கள்  பிடியில் இருந்த குழந்தைகளை மீட்ட இன்னொரு ஏட்டு மொகமது சலீம்  தாக்கப்பட்டார். அந்த பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் தீ வைத்து கொளுத்தப்பட்டது.  அங்கு சென்ற தீயணைப்பு வாகனம், ஆட்டோக்கள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன.  மவுஜ்பூர், ஜாப்ராபாத் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வருவதற்கு சில மணி  நேரங்களுக்கு முன் இருதரப்பினர் மோதலில் ஒரு ஏட்டுகொல்லப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

டிவிட்டர் பதிவால் வந்த கலவரம்

பா.ஜ பிரமுகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா தனது டிவிட்டர் பதிவில் “ஜப்ராபாத், மற்றும் சாந்த் பாக் சாலையை சரிசெய்ய போலீசாருக்கு 3 நாட்கள் அவகாசம் இருக்கிறது. அதன்பின்னரும் அவர்கள் காலி செய்யாவிட்டால் எங்களை சமாதானம் செய்ய போலீசார் முயற்சிக்க வேண்டாம். நாங்கள் உங்கள் (போலீஸ்) பேச்சைக் கேட்க மாட்டோம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த டிவிட்டர் தகவல் சிஏஏ எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிஏஏ ஆதரவாளர்கள் போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்ததால் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டு  கலவரம் வெடித்தது.

ஏட்டு சுடப்பட்டு பலியா? 7 பேருக்கு குண்டு காயம்

கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 17 பேர் ஜிஆர்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 7 பேர் குண்டு காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனை போலீசார் உறுதி செய்தனர். அதோடு, சகாதாரா பகுதி துணை கமிஷனர் அமித்சர்மா படுகாயமடைந்தார். துப்பாக்கியால் சுட்டது கலவரக்காரர்களா? ஏட்டும் சுடப்பட்டு பலியானாரா? என்று விசாரணை நடக்கிறது.

Tags : riots ,Delhi Two ,Delhi , Two dead, two deadly, riots in Delhi
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...