×

அகமதாபாத்தில் 1 லட்சம் பேர் திரண்டு வரவேற்பு பிரமாண்ட கூட்டத்தில் டிரம்ப் பேச்சு

* நட்புறவு, ராணுவ ஒத்துழைப்பு அளிக்க உறுதி
* காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்றார்
* ஆக்ராவில் தாஜ்மகாலை சுற்றி வந்து ரசித்தார்
* நினைவு பரிசுகளை வழங்கி பிரதமர் மோடி பாராட்டு
* டெல்லியில் இன்று ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

அகமதாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று காலை வந்த அதிபர் டிரம்ப்புக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டபின் அவர், அகமதாபாத்தில் உள்ள மொடேரா ஸ்டேடியத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றினார். இதில் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார். அகமதாபாத்தில் 22 கிமீ தூரம், அதிபர் டிரம்ப்புக்கு ஒரு லட்சம் மக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தனர். இந்தியா வந்த 7வது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில், அதிபர் டிரம்பின் ஏர்போர்ஸ் ஒன் விமானம் நேற்று காலை 11.37 மணிக்கு தரையிறங்கியது. விமான நிலையத்தில் அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி கட்டித் தழுவி வரவேற்றார். அதிபர் டிரம்புடன், அவரது மனைவி மெலானியா,  மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் ஆகியோர் உட்பட அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு வந்தனர்.

விமான நிலையத்தில் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதன்பின், கலைக்குழுவினர் சங்கொலி எழுப்பியும், நடனமாடியும் அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியாவை வரவேற்றனர். இவற்றை இருவரும் சிரித்தபடி ரசித்தனர். பின்னர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சமர்பதி ஆசிரமத்துக்கு புறப்பட்டு சென்றனர். இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், வழிநெடுகிலும் கலைக்குழுவினர் இசைக் கருவிகளுடன் ஆடி, பாடி டிரம்ப்புக்கு வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு புறத்திலும் மக்கள், அமெரிக்க மற்றும் தேசியக் கொடியுடன் டிரம்புக்கு வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும், டிரம்ப், மோடி இணைந்து நிற்கும் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ரசித்தபடியே அதிபர் டிரம்ப் சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோருக்கு காதி துண்டு சபர்மதி ஆசிரமம் சார்பில் அணிவிக்கப்பட்டது. பின் ஆசிரமத்தை சுட்டிக் காட்டி, பிரதமர் மோடி விளக்கினார். காந்தியும், அவரது மனைவியும் தங்கியிருந்த ‘ஹிர்தே கஞ்ச்’ அறை அவர்களுக்கு காட்டப்பட்டது. ராட்டையில் காந்தி நூல் நூற்றதும், டிரம்புக்கு விளக்கப்பட்டது. டிரம்ப்பும், மெலானியாவும், ராட்டை சுற்றினர். சபர்மதி ஆசிரமத்தில் காந்தி வைத்திருந்த 3 குரங்குளின் பொம்மைகள் குறித்தும், அதிபர் டிரம்புக்கு மோடி விளக்கினார். மேலும், வெள்ளை பளிங்கு கல்லில் செய்யப்பட்ட 3 குரங்குகளின் பொம்மைகளை, டிரம்ப்புக்கு நினைவு பரிசாக மோடி வழங்கினார்.

சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட பின், அவர்கள், சர்தார் வல்லபாய் படேல் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட மொடேரா ஸ்டேடியத்துக்கு மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்றனர். இது அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்டேடியம். உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான, இங்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரலாம். இங்கு நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.  அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் சில மாதங்களுக்கு முன் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியைப்போல், இது நடந்தது. இருநாடுகளும் உறுதி: நமஸ்தே மோடி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: இந்தியாவை, அமெரிக்கா மிகவும் நேசிக்கிறது. இரு நாடுகள் இடையே இயல்பான நட்பு இருக்கிறது. அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்கு விசுவாசமான நாடாக இருக்கும். எங்களுக்கு பிரமாண்ட கண்கவர் வரவேற்பு அளித்ததற்கு நன்றி. பிரதமர் மோடி விதிவிலக்கான நபர். அவர் நாட்டுக்காக இரவு பகலாக உழைக்கிறார். இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது கொள்கைகளுக்கு எதிராக போராடுவதில் உறுதியாக உள்ளன. தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து 3 பில்லியன் டாலர் (21 ஆயிரம் கோடி) மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளோம். பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் முதன்மையான கூட்டணி நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

உலகம் முழுவதும் நமது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறோம். மிகச் சிறப்பான வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரு நாடுகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், வர்த்தக பேச்சுவார்த்தையில் மோடி மிக கடுமையான நபராக உள்ளார். அவர் டீ கடையில் இருந்து நாட்டை ஆளும் நபராக மாறி உள்ளார். கடின உழைப்பு மூலம் இந்தியர்கள் முன்னேறுபவர்கள் என்பதற்கு அவர் ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்தியா 70 ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறி உள்ளது.  இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார். புதிய அத்தியாயம்: இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்கு அதிபர் டிரம்பை வரவேற்கிறேன். அதிபர் டிரம்பின் இந்த பயணம், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இந்த புதிய அத்தியாயம், அமெரிக்கா மற்றும் இந்திய மக்களை முன்னேற்றும், வளமடையச் செய்யும்.

அமெரிக்காவுக்கு டிரம்ப் செய்தது எல்லாம் நல்ல பலன்களை அளித்துள்ளது. குழந்தைகளுக்காக அவர் செய்யும் பணிகள் போற்றுதலுக்குரியது. இன்று 130 கோடி இந்தியர்களும், ஒன்றாக சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.  இன்று இந்தியா மேற்கொள்ளும் மிகப் பெரிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கூட்டணியாக இருக்கும் நாடு அமெரிக்காதான் என்றார். இதைத்தொடர்ந்து டிரம்ப் தனது மனைவியுடன் ஆக்ராவுக்கு சென்று தாஜ்மகாலை பார்வையிட்டார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை முறைப்படி, அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். அப்போது ராணுவம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலையின் இருபுறமும் திரண்டு மக்கள் வரவேற்பு

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம் வரை அதிபர் டிரம்ப் தனது பீஸ்ட் காரில் 22 கி.மீ தூரம் பயணம் செய்தார். அப்போது ரோட்டின் இரு புறமும் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று, அமெரிக்க மற்றும் இந்திய கொடிகளை அசைத்து வரவேற்பு அளித்தனர். ரோடு முழுவதும் கலைக்குழுவினர் ஆங்காங்கே ஆடல், பாடலுடன் வரவேற்பு அளித்தனர்.

‘கடவுளை போன்றவர்கள் விருந்தினர்கள்’

இந்தியா வருவதற்கு சில மணி  நேரங்களுக்கு முன் அதிபர் டிரம்ப் விமானத்திலிருந்தே டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘‘இந்தியா வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறோம். வந்து கொண்டிருக்கிறோம். சற்று  நேரத்தில் நாம் சந்திப்போம்’’ என இந்தியில் தெரிவித்திருந்தார். இதற்கு  பதிலளித்து பிரதமர் மோடி ‘அதிதி தேவா பவ’ என சமஸ்கிருத மொழி வாசகத்தை  குறிப்பிட்டிருந்தார். இதற்கு  ‘விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்’  என அர்த்தம்.

13,000 கிமீ தாண்டி வந்தாலும் தேர்தல் நினைப்பு போகல...

அமெரிக்காவில் இருந்து 13,000 கி.மீ. கடந்து இந்தியாவில் இருந்தாலும் உள்நாட்டு அரசியல் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அகமதாபாத்தில் இருந்து ஆக்ரா புறப்பட்டு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ‘‘நிவேடாவில் நடந்த ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அதிபர் தேர்தலில் அவரை வெற்றி பெற செய்ய மாட்டார்கள். மற்ற வேட்பாளர்களை காட்டிலும் அவர் மிகவும் கடினமானவர் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர் என்னை போன்றவர். ஆனால் நான் அவரைக்காட்டிலும் வெற்றி பெறுவதற்கான அதிக அடித்தளத்தை கொண்டுள்ளேன்” என்றார்.

வீணானது காமன்

சபர்மதி ஆசிரமத்துக்கு நேற்று அதிபர் டிரம்ப் வந்தபோது, அவருக்காக அறுசுவை சிற்றுண்டிகள் தயார் செய்யப்பட்டன. இதில் குஜராத்தின் சிறப்பான உணவு வகைகளில் ஒன்றான கடலைப் பருப்பில் தயாரிக்கப்படும் காமன், காஜூ கத்லி, சோளத்தில் தயார் செய்யப்பட்ட சமோசா என விதவிதமான இனிப்பு, காரம் தயாரிக்கப்பட்டன. பிரபல சமையல் கலைஞர் கன்னா இதை தயாரித்திருந்தார். ஆனால், அதிபர் டிரம்ப் நேற்று சபர்மதி ஆசிரமத்தில் எதையுமே சாப்பிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

சிறந்த வர்த்தக ஒப்பந்தம்

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அதிபர், “அமெரிக்கா இந்தியா இடையே உள்ள முதலீட்டுக்கான தடைகளை குறைப்பதற்கான சிறந்த வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கை குறித்த ஆலோசனையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இதற்காக இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நானும் பிரதமர் மோடியும் சிறந்த ஒப்பந்தத்தை எட்டுவோம். அது இருநாடுகளுக்கும் மிக சிறந்த ஒன்றாக இருக்கும். எனது இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியும், நானும் இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை விரிவாக்குவது குறித்து விவாதிக்க உள்ளோம்” என்றார்.

அன்று டீ விற்பனையாளர் இன்று நாட்டின் தலைவர்

‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்தார். அதிபர் பேசுகையில், “பிரதமர் மோடியை அனைவரும் நேசிக்கின்றனர். ஆனால் அவர் பேச்சுவார்த்தையில் மிகவும் கண்டிப்பானவர். பிரதமர் மோடி, நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டும் அல்ல. கடினமான உழைப்பு மற்றும் பக்தியினால் இந்தியர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சியாக வாழ்கிறீர்கள். பிரதமர் ேமாடியின் வாழ்க்கையானது, இந்த நாட்டின் எல்லையற்ற வாக்குறுதியை அடிகோட்டிட்டு காட்டுகின்றது. தனது வாழ்க்கையை ‘சாய் வாலா’ வாக தொடங்கினார். டீ விற்பனையாளர் இந்த நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். அவர் ஒரு வெற்றிகரமான தலைவர்” என்றார்.

விருந்துக்கு டாட்டா; மன்மோகன் முடிவு


இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருந்தளித்து கவுரவிக்கிறார். இதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை மன்மோகன் சிங் ஏற்றார். இந்நிலையில் தன்னால் விருந்தில் பங்கேற்க இயலாது என மன்மோகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அவர் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியும் அதிபர் டிரம்ப் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய  அரசு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா, ராகுலுக்கு இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்காமல் புறக்கணித்துள்ளதாகவும், எனவே விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர்கள் தவிர்ப்பதாகவும் கூறப்படுகின்றது.

10,000 போலீசார் பாதுகாப்பு

குஜராத்  மாநிலம் அகமதாபாத்தில் நேற்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர். விமான நிலையத்திலிருந்து, சமர்பதி ஆசிரமம் மற்றும்  மொடேரா ஸ்டேடியம் வரை சாலையின் இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில்  நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி),  சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்பிஜி) மற்றும் அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ்  பாதுகாப்பு அதிகாரிகளும் அதிபர் டிரம்ப் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

நண்பருக்கு நன்றி

சபர்மதி ஆசிரமத்தில்  வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பு எழுதிய அதிபர்  டிரம்ப், ‘‘இந்த அருமையான பயணத்துக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி’’ என குறிப்பிட்டார்.

பாலிவுட்டை புகழ்ந்த டிரம்ப்

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் பாலிவுட் படங்களையும், நடிகர்களையும் புகழந்தார். அவர் பேசுகையில், ‘‘ஆண்டுக்கு 2 ஆயிரம் திரைப்படங்களை தயாரிக்கும் நாடு இந்தியா. பாலிவுட் என்ற அறிவுஜீவிகள் உருவாகும் இடம் இது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பாங்க்ரா நடனம், இசை, நடனம், காதல் காட்சிகள், நாடகம், தில்வாலோ துல்ஹனியா ேலஜாயங்கே, சோலே போன்ற இந்திய திரைப்படங்களை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர்’’ என்றார்.

இந்திய ஜவுளிக்கு மரியாதை

அதிபர் டிரம்ப் நேற்று குஜராத் வந்தபோது, அடர் நீல நிற கோட் மற்றும் மஞ்சள் டை அணிந்து வந்தார். அவரது மனைவி வெள்ளை நிற கவுன் அணிந்து இடுப்பில் தங்க ஜரிகையுடன் கூடிய பச்சை பட்டால் நெய்யப்பட்ட பட்டையை அணிந்திருந்தார். இதை பிரெஞ்சு-அமெரிக்கன் ஆடை வடிவமைப்பாளர் ஹெர்வே பியர் வடிவமைத்திருந்தார். இந்த டிசைன், 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய ஜவுளி தொகுப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஜவுளிக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த தங்க ஜரிகையுடன் கூடிய இந்த பச்சை பட்டு துணிப் பட்டையை மெலானியா அணிந்திருந்தார்.

தாஜ்மஹால் டிக்கெட் கவுன்டர் மூடல்

டிரம்ப், தாஜ்மஹாலை  நேற்று பார்வையிட்டதால், டிக்கெட் கவுண்டர்கள் காலை 11.30 மணியளவில் மூடப்பட்டன.அதன்பின் அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆக்ராவுக்கு நேற்று மாலை வந்த அதிபர் டிரம்ப் குடும்பத்தினர்  தாஜ்மஹால் சுற்றிப் பார்த்தனர். டிரம்ப் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இவாங்கா டிரஸ் 1.7 லட்சம்

அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவரது மகள் இவாங்காவும் இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று அவர் அணிந்திருந்த ஆடையின் விலை 1.7 லட்சம் என்று தெரியவந்துள்ளது. அந்த உடை பேபி ப்ளூ நிறத்திலாலான மிடி ரக ஆடையாகும். அதில் சிவப்பு நிறத்தில் பூக்கள் போடப்பட்டிருந்தன. இதை தயாரித்த நிறுவனம், புரோவன்சா ஸ்காலர் ஆகம்.

1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி அகமதாபாத்தில் மொடேரா பகுதியில் 64 ஏக்கர் பரப்பில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. இது கடந்த 2 ஆண்டுகளாக 700 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில் 1 லட்சத்து 10 பேர் அமரலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மக்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி, அவர்களின் பின்னணியை போலீசார் விசாரித்திருந்தனர். நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு தொடங்கினாலும், அங்கு நேற்று காலை 8 மணியிலிருந்தே மக்கள் வந்து ஸ்டேடியத்தில் அமரத் தொடங்கினர். பார்க்கிங் பகுதி வெகு தொலைவில் அமைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் ஸ்டேடியத்துக்கு வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களின் பொழுதுபோக்குக்காக இன்னிசை கச்சேரிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் பாடகர் கைலாஷ் கேர், ஆகியோர் பாட்டுப்பாடி பார்வையாளர்களை உற்சாகமூட்டினர். நாட்டுப்புற பாடகர்களான கீர்த்திதன் காத்வி, கீதா ரபாரி, புருஷோத்தம்  உபாத்யாய் மற்றும் சைராம் டேவ் ஆகியோர் அரங்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினர். ஸ்டேடியத்தில் பலர் டிரம்ப் மற்றும் மோடி முகமூடி அணிந்திருந்தனர்.

கோ பேக் டிரம்ப்

இந்தியா வந்த அதிபர் டிரம்புக்கு எதிராக  டிவிட்டரில் #GoBackTrump என்ற ஹேஷ்டேக்  டிரெண்டாகி வருகிறது. டிரம்ப்  இந்தியா வருவதே, அதிபர் தேர்தலை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள  இந்தியர்களை ஈர்க்கத்தான் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. மேலும்,  டிரம்ப் வருகையை முன்னிட்டு குடிசைகளை மறைக்க தடுப்புகள் கட்டப்பட்டதும்,  அவரை வரவேற்க பல லட்சம் பேர் திரள்வர் என கூறப்பட்டதும் மக்கள் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  அதேநேரம் டிரம்பை வரவேற்றும் ஹேஷ்டேக் உருவாக்கி சமூகவலைதளத்தில்  கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ஆற்றில் நீர் திறப்பு மல்லிகை தோரணம்

ஆக்ராவில் தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையிட்டபோது, அருகில் உள்ள யமுனை ஆற்றின் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக உபி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது, பல ஆண்டுகளாக யமுனையில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை சுத்தப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள கங்கநாகரிலிருந்து யமுனையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுதவிர யமுனை ஆற்றின் பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மல்லிகைப்பூ தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.



Tags : speech ,Ahmedabad ,gathering ,Trump , Trump's speech,large gathering of 1 lakh people ,Ahmedabad
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி