×

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தண்டனை பெற்ற 3 பேர் மேல்முறையீடு : மகளிர் போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்  ஐந்து ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தண்டனை பெற்ற 3 பேர்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒன்பது பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து பிப்ரவரி 3ம் தேதி சென்னை போக்சோசிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உமாபதி, லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகிய 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை. மருத்துவ அறிக்கையும் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. உரிய சாட்சிகள் இல்லாமல் எங்களை விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து தண்டனை வழங்கியுள்ளது. எனவே, எங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி ஆஜரானார். மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர்.

Tags : women ,death ,Ayanavaram , Three women sentenced,death ,Ayanavaram
× RELATED இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல் ரவுடி கைது