×

லஞ்ச குற்றச்சாட்டில் உள்ள சார்பதிவாளர்களுக்கு நல்ல பதவி பல கோடி இழப்பு ஏற்படுத்தியவர்கள் ஓய்வு பெற அனுமதியை எதிர்த்து வழக்கு

சென்னை: லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்திரப்பதிவு அதிகாரிகளை, செல்வாக்கான இடங்களில் பணிமாற்றம் செய்ததோடு, பல கோடி இழப்புகளை ஏற்படுத்தியவர்களை ஓய்வு பெற அனுமதி அளித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழக பத்திரப்பதிவு துறையின் ஐஜி குமரகுருபரன் மாற்றப்பட்ட பின்பு இப்பதவிக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த பொறுப்பு தமிழக அரசின் முதன்மை செயலாளர் கூடுதலாக கவனித்து வந்தார். அந்த நேரத்தில், பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தன. சார் பதிவாளர்களாக இருந்த வசந்தகுமார், காளிமுத்து ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் அவர்கள் ஓய்வு பெற தமிழக அரசு அனுமதி வழங்கியது. இது குறித்து தினகரன் பத்திரிகையில் விரிவான செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், 2019ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடமாறுதல் அரசாணையில், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார்பதிவாளர் கோபால கிருஷ்ணனை செங்கல்பட்டு மாவட்ட சார் பதிவாளராக நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘கருப்பு எழுத்து கழகம்’ என்ற அமைப்பு சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாவட்ட பதிவாளராக இருப்பவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியக்கூடாது. அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சரத்துகள் வணிகவரித்துறையின் 1993ம் ஆண்டைய அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த 2019ல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வில்விவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018 டிசம்பர் 13ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ, 70 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துைறையின்பேரில், சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தூத்துக்குடியில் பணியில் சேரவில்லை. விடுமுறையில் இருந்தவரை, 4 மாதங்களுக்குள் செங்கல்பட்டு சார்பதிவாளராக பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், மதுரையில் 3 சார்பதிவாளர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் சார் பதிவாளராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி பதிவாளர் இன்டலிஜென்ட் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் பணியில் சேராமல் இருந்தார்.

வசந்தகுமார் என்ற சார் பதிவாளர் மீது 17 குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவரை ஓய்வுபெற அரசு அனுமதியளித்துள்ளது. துறைக்கு ரூ.8 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய காளிமுத்து என்பவருக்கும் ஓய்வு பெற அனுமதி தரப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2019 ஜூலை 5ம் தேதி மதுரையை சேர்ந்த காந்தப்பன், மணிமுருகன் உள்ளிட்ட 15 பேரை இடமாற்றம் செய்து தமிழக வணிகவரித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதில் பலர் விதிமுறைகளுக்கு முரணாக மதுரையிலேயே இடமாற்றம் பெற்றுள்ளனர். சட்டவிரோதமாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, விதிமுறைகளை மீறியும், பணத்துக்காகவும் பிறப்பிக்கப்பட்டுள்ள பணி மாறுதல் உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ப.விஜயேந்திரன் ஆஜரானார். அப்போது, குற்றச்சாட்டுகளை படித்துப் பார்த்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மாலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆஜராகினர். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான வக்கில் இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் வணிக வரித்துறை முதன்மை செயலாளர் வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Prosecutors ,retirees ,retirement clerk , Prosecutors in the bribery case,lawsuit ,retirement clerk ,several crores of good post
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்