×

100க்கு ஆபாசப்படம் அனுப்பி 350 பேர் மீது ஆன்லைனில் புகார் அளித்து பணம் பறித்த இன்ஜினியர் கைது

சென்னை: 100க்கு ஆபாச படம் அனுப்பி, அவர்கள் மீது போலீஸ் இணையதளத்தில் புகார் அளித்து பெண் குரலில் நூதன முறையில் 350 க்கும் மேற்பட்டோரிடம் பணம் பறித்த நெல்லை இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். மோசடி பணத்தில் சொந்த வீடு மற்றும் கார் வாங்கியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கடந்த 19ம் தேதி உதயராஜ்(25) என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், ப்ரியா என்ற பெண் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய நிர்வாண படம் உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் 100 அனுப்புமாறு கேட்டார். நானும் 100 அனுப்பினேன். அவரும் படம் அனுப்பினார். அதைத்தொடர்ந்து ஆபாச வீடியோ அனுப்ப 1,500 கேட்டு எனக்கு தொடர்ச்சியாக பல்வேறு எண்களில் இருந்து போன் செய்து வந்தார். அதற்கு நான் வேண்டுமென்றால் நேரில் வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அந்த பெண் என் மீது சென்னை காவல் துறை இணையதளத்தில் அவரை நான் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக புகார் அளித்து, அதன் புகார் மனுவின் நகலை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டுகிறார். எனவே சம்பந்தப்பட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திருநெல்வேலியை சேர்ந்த வள்ளல் ராஜ்குமார் ரீகன்(27) என்ற இன்ஜினியர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த மோசடி இன்ஜினியரை பிடிக்க இணை கமிஷனர் சுதாகர் உத்தரவுப்படி மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி தனிப்படையினர் தீவிர தேடுதலுக்கு பிறகு தலைமறைவாக இருந்த வள்ளல் ராஜ்குமார் ரீகனை ேநற்று முன்தினம் இரவு பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆணாக உள்ள வள்ளல் ராஜ்குமார் ரீகன், குரல் மட்டும் பெண் குரலாக இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு பெண் குரல் உள்ளதை பயன்படுத்தி கொண்ட இன்ஜினியர் ரீகன், சென்னை முழுவதும் குறிப்பாக மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் உள்ள 350க்கும் மேற்பட்டோரிடம் அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு ப்ரியா பேசுகிறேன் என்று வசிய குரலால் பேசி தன்னுடைய ஆபாச படம் நீங்கள் பார்க்க விரும்பினால் 100ம் நான் குளிக்கும் காட்சிகளை வீடியோவாக பார்க்க வேண்டும் என்றால் 1500 வரை பணத்தை ஆன்லைனில் அனுப்ப ேவண்டும் என்று கூறி படம் மற்றும் வீடியோ அனுப்பி அதை வைத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஆன்லைன் மூலம் புகார் கொடுத்து, அந்த புகாரின் நகலை சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

இதுபோல் கடந்த 2ஆண்டுகளாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் 350க்கும் மேற்பட்டோர் மீது ஆன்லைனில் புகார் அளித்து பணம் பறித்து அந்த பணத்தில் சொந்த ஊரில் வீடு மற்றும் கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் பெண் குரல் கொண்ட வள்ளல் ராஜ்குமார் ரீகனை கைது செய்தனர். மேலும், இதுவரை எத்தனை பெயரிடம் இதுபோல் மோசடியாக பணம் பறித்து வந்துள்ளார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வங்கி கணக்குகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நபர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் பாதிக்கப்பட்ட நபர்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

Tags : engineer ,engineer arrest , Engineer arrested , filing pornography online
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...