×

கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

விருதுநகர்: கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமென மாணவர்கள் தெரிவிக்கின்றனர். விருதுநகரில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளி, 3 கல்லூரி, 3 பொறியியல் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு நகரை சுற்றியுள்ள   கிராமங்கள், நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள்  வந்து செல்கின்றனர். சில பள்ளி, கல்லூரிகள் சொந்தமாக வாகன போக்குவரத்து செய்து கொடுத்துள்ளன. இருப்பினும் கிராமங்களில் உள்ள மாணவர்கள் அரசு பஸ் மூலம் விருதுநகர் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
 
டவுன் பஸ்களில் பேராலி, அழகாபுரி, காரியாபட்டி, மாந்தோப்பு வழி காரியாபட்டி, கன்னிசேரி மற்றும் விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. பஸ்களின் உட்பகுதியில் இடம் இல்லாத நிலையில் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர். விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் டவுன்பஸ்கள் அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முந்தைய காலவதியான பஸ்களாக உள்ளன. மாணவர்கள் படிகளில் பக்கவாட்டு கம்பிகளை பிடித்து தொங்கி பயணிக்கின்றனர். விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல வசதியாக காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
விருதுநகர் கோட்டத்தில் இயக்கப்படும் காலவதியான பஸ்களை நீக்கி தரமான பஸ்களை இயக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : villages , Bus facility, students, dangerous journey, demand
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு