×

கடலூரில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: அப்துல் கலாமின் முகத்தோற்றத்தில் நின்ற மாணவர்கள்... 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கடலூர்: கடலூரில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக இணைந்து, அப்துல் கலாமின் முகத்தை உருவாக்கி சாதனை படைத்தனர். கடலூரில் சுமார் 700க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு அப்துல்கலாம் முகம் வரைந்து காண்பிக்கப்பட்டது. மரம் வளர்த்தல் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மரம் வளர்த்தல் குறித்து பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. தொடர்ந்து, பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் மரத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்க தொடங்கிவிட்டன. அதன்படி, மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கடலூரில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முகத்தோற்றத்தை ஏற்படுத்தினர்.

மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாகவும், மரத்தின் அத்தியாவசியம் குறித்தும், மரம் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் வகையிலும், கடலூரைச் சேர்ந்த சிம்பிள் டிரஸ்ட் எனும் தனியார் அறக்கட்டளை சார்பில் மரமும் மாற்றமும் என்ற தலைப்பில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி இன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மைதானத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் முகத்தை உருவமாக வரைந்து, மாணவர்கள் இணைந்து நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் கைகளில் தேசிய கொடி வண்ணம் தோன்றும் வகையில் பலூன்களை பிடித்தவாறு நின்றனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் 500 பேருக்கு விதைப் பந்துகள் வழங்கப்பட்டது.

Tags : Participants ,Abdul Kalam ,Cuddalore ,Faculty , Cuddalore, Tree Planting, Awareness, Abdul Kalam, Faculty, Students
× RELATED சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற...