×

சிவகங்கை அருகே ஜமீன்தார் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு: 131 ஆண்டுகள் பழமையானது

சிவகங்கை: சிவகங்கை அருகே களத்தூர் விலக்கில் பாண்டியாபுரம் கண்மாய் பகுதியில் உள்ள முனி கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கள ஆய்வு செய்தார். இதில் அது 131 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் கால கல் வெட்டு என்பது தெரிய வந்தது. கல்வெட்டு குறித்து அவர் கூறுகையில், ‘‘சிவகங்கையின் கடைசி மன்னரான வேங்கை பெரிய உடையண ராஜாவிற்குப் பிறகு 1801லிருந்து ஜமீன்தார் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. அதில் 1883லிருந்து 1898 வரை மூன்றாவது கவுரி வல்லப உடையண ராஜா ஆட்சி செய்து வந்ததாக பட்டியல் வழி அறிய முடிகிறது. அவரது மகனான மகமு சுந்தர பாண்டியனால் இக்கல்வெட்டு வெட்டி வைக்கப் பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டில் 16 வரிகள்  நெருக்கமாக எழுதப்பட்டுள்ளன. படுக்கை வசமாக கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டில் ‘1888ல் சூன் மாதம் 6ம் நாள் சருவதாரி ஆண்டு வைகாசி மாதம் 21ம் நாள் வெள்ளிக்கிழமை ஜமிந்தார் அரண்மனைச்சாமியாகிய கவுரி வல்லபத் தேவர் ஸ்ரீகோட்டை நாச்சியாராகிய மெலிறமினை மகமு நாச்சியாரவர்கள் பெற்ற மகமு சுந்தர பாண்டியத் தேவரவர்கள் இந்த கண்மாயும் மடையும் முனியப்ப சாமி கோவிலும் உண்டு பண்ணி மகமு சுந்தர பாண்டியாபுரம் கிராமம் என்று பெயருமிட்டு இருக்கிறது’ என எழுதப்பட்டுள்ளது. பொதுவாக அனைவரும் தந்தையின் பெயரை முன் சூட்டிக் கொள்வர். ஆனால் இவரோ தன்னை மகமு சுந்தர பாண்டியன் எனக் கூறிக்கொள்வதின் வழி தாயின் பெயரை முன் சூட்டி தாய்க்கு பெருமை சேர்க்கிறார். சிவகங்கையில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மகமு சுந்தர பாண்டியருக்கும் அவரது தாய் மகமு நாச்சியாருக்கும் சிலை உள்ளது.

இக்கோவிலில் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறை பதிவு செய்துள்ளனர். இக்கோவிலில் கடந்த குடமுழுக்கின் போது அகற்றப் பெற்று கேட்பாரற்றுக்கிடந்த 13ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகர் 1733ல் அமையப் பெற்றாலும் 13ம் நூற்றாண்டிலேயே இக்கோவில் இருந்ததை அறிய முடிகிறது. இக்கோவில் மகமு சுந்தர பாண்டியர் காலத்தில் பழுதுநீக்கி குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கலாம்’’ தெரிவித்தார்.

Tags : Sivaganga ,inscription , discovery , Zamindar period ,inscription,Sivaganga, 131 years old
× RELATED சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி!!