×

திருச்சுழி அருகே தார்ச்சாலை பாதி...மண் சாலை மீதி...: மண்டைகாயும் கிராமமக்கள்

திருச்சுழி:  திருச்சுழி  அருகே மண் பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியிலிருந்து வேடநத்தம் செல்வதற்கு குறுக்குப்பாதையாக வண்டிப்பாதை உள்ளது. சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த பாதையை பல வருடங்களாக மக்கள் கடந்து சென்றனர். இப்பகுதியில் உள்ள வேடநத்தம், தம்மநாயக்கன்பட்டி ஆகிய கிராம பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்ல வேண்டும் என்றால் ஒத்தக்கடை முத்துராமலிங்கபுரம் வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் போது ஐந்து கிலோ மீட்டர் அதிகமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் ஆலடிபட்டி வழியாக குறுக்கு வழி பாதையாக வேடநத்தம் பகுதிக்கு சென்று திரும்பினர்.

இதனால் பயணதூரம் மற்றும் பயண நேரம் குறைவதோடு மக்கள் விரைவாக அருப்புக்கோட்டைக்கு சென்றனர். மேலும் வண்டி பாதையாய் இருந்ததால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன்  பேரில் கடந்த 2018ம் ஆண்டு பிரதம மந்திரி   கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ்  சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் இப்போது சாலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மீதமுள்ள மண்பாதை சீரமைக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நான்குசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் வாகனங்கள் செல்ல முடியமால் சேற்றில் சிக்குகின்றன. எனவே சிரமம் இன்றி வாகனங்கள் கடக்க மீதமுள்ள சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், தினந்தோறும் கல்லூரணி அருப்புக்கோட்டை செல்வதற்கு குறுக்கு வழியாக பாதையை பயன்படுத்தி வருகின்றோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டும் டென்டர் விடப்பட்டு புதிதாக  தார்ச்சாலை போடப்பட்டது. மீதமுள்ள மண்பாதை அப்படியே விடப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல சிரமப்படுகிறோம் எனவே மண்பாதையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags : tarchal ,Tiruchi ,Mud ,villages ,road , Half ,tarchal , Tiruchi, Mud road remaining , Mandaikayum villages
× RELATED கம்பம் 14வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆய்வு