நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் சாலை: கழிவுநீர் தேங்குவதால் பரவும் மர்ம காய்ச்சல்

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து

வருகின்றனர். சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரே பேரூராட்சியான நாட்டரசன்கோட்டையில் உள்ள 12 வார்டுகளில் சுமார் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நாட்டரசன்கோட்டையை சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இரண்டு மேல்நிலை பள்ளிகள் உள்ளிட்ட இவ்வூரில் உள்ள பள்ளிகளின் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் சமாதியும் இங்கு உள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குண்டும் குழியுமாய் உள்ளன. மாணிக்கவள்ளித் தெரு வழியே காளையார்மங்கலம் செல்லும் சாலை என்பதற்கான அடையாளமே இல்லாமல் உள்ளன. இவைகள் இரண்டுமே பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள். ஒன்று முதல் 12 வார்டுகளில் சில சாலைகள் தவிர பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன. கழிவுநீர் கால்வாய்களில் செடிகள், பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து பராமரிப்பில்லாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாய்க்குள் தேங்கி நிற்கிறது. இதனால் அதிகப்படியான கொசுக்கள் உருவாகி மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

குடிநீர் தொட்டிகள் பல மாதங்கள் வரை சரிவர சுத்தம் செய்வதில்லை. இங்குள் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்து பல மாதங்கள் ஆகிறது. தற்போது இடிந்த சுவர் மட்டுமே உள்ளது. தனியார் இடத்தில் உள்ள இந்த பஸ் ஸ்டாண்டிற்கு பதில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேரூராட்சியில் சாலைகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகள் பராமரிப்பின்றியும், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, ‘பல ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாய் இருக்கும் நிலையில் பராமரிப்பு கூட செய்யவில்லை. கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பின்றி உள்ளதால் 2வது வார்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை காலங்களில் வீடுகளுக்குள் நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலேயே பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை கூட இல்லாத பேரூராட்சியாக நாட்டரசன்கோட்டை உள்ளது. உடனடியாக போதிய அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>