×

அருப்புக்கோட்டை அஜீஸ் நகரில் இருளில் மூழ்கி கிடக்கும் நகராட்சி பூங்கா: மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

அருப்புக்கோட்டை:  அருப்புக்கோட்டை நகராட்சி பூங்காவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அஜீஸ் நகரில் பல வருடங்களுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது.  நன்கு பராமரிக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, குழந்தைகளுக்கு விளையாட்டு கருவிகள் மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் வெளிச்சத்திற்காக ஆங்காங்கு வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  அந்த பகுதியில் உள்ள மக்கள்  மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள்  காலை, மாலை நேரங்களில் இந்த பூங்காவை நன்கு பயன்படுத்தி வருகின்றனர்.   சனி, ஞாயிறு நாட்களில் நகரில் பொழுதுபோக்குவதற்கு இடம் இல்லாததால் இந்த பூங்காவிற்கு அதிகளவில் கூட்டம் வருகிறது.  தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சிக்காக வயதானவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.  

முறையான பராமரிப்பு இல்லாததால்  செடிகளின் இடையே களைகள் முளைத்துள்ளன. செடி மற்றும் மரங்களை சீராக வெட்டி விடாததால் அவை கிளைகளை பரப்பியும், நன்கு வளர்ந்து உயர்ந்துள்ளதால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் வெளிச்சம் தெரிவதில்லை.  செடி முட்புதர்கள் போல் வளர்ந்துள்ளதால் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் வாழும் இடமாக உள்ளது.  இதனால் பூங்காவிற்கு வர பெரியவர்கள், குழந்தைகள் பயப்படுகின்றனர்.  பூங்காவில் உள்ள இருக்கைகள் பல சேதமடைந்துள்ளது.  அங்குள்ள மின்விளக்குகள் பல பழுதடைந்து  எரியாமல் உள்ளது.  பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வந்த பூங்கா பராமரிப்பின்றி தற்போது பொலிவு இழந்து காணப்படுவதால் மக்கள் வருகை குறைந்துவிட்டது.  பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காவை உடனடியாக பராமரிப்பு செய்தும், இருக்கை வசதி சரிசெய்தும், மின்விளக்குகள் பழுது நீக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : park ,city ,Aziz ,Aruppukkottai ,Municipal Park , Municipal park,dark of Aziz city,Aruppukkottai: Will the lights,set up?
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜா மலர்கள்