×

மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் பழுதடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்,: திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் சாலை பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணி பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராட்சத தூண்கள் மீது ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், தினசரி காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வரும் பெற்றோர்  சாலையில் சிதறிக்கிடக்கும் கருங்கற்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து  காயமடைகின்றனர். குறிப்பாக எல்லையம்மன் கோயில் தெரு, திருவொற்றியூர் மார்க்கெட், அஜாக்ஸ் போன்ற பல இடங்களில் மிக மோசமாக சாலை பழுதடைந்துள்ளது.

எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  ‘‘மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் மெட்ரோ நிர்வாகம் சாலை அமைக்க வேண்டும் என்பது விதி. இதற்காக நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையை போட்டுவிட்டு மற்ற இடங்களில் சாலைகள் போடாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்று வருகிறது. இதனால் உயரத்தில் இருந்து இரும்பு கம்பி போன்றவைகள் கீழே சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் பணிகளை செய்ய வேண்டும்,’’ என்றனர்.

முடிவுக்கு வராத கால்வாய் பணி
திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரம் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதை முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. மேலும் இந்த கால்வாயில் சிலர் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை விடுகின்றனர். இந்த கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் நாட்கணக்கில் கால்வாயில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்வாயில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதால், வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமப்படுகின்றனர்.

Tags : rail work ,motorists ,Motorists Metro ,road ,avadi , Metro rail work, impaired road, traffic impact, motorists, avadi
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...