×

திண்டுக்கல், கோவை, தஞ்சை, நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 2 பேர் பரிதாப சாவு: காளையை ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்து இருவர் சாவு

சென்னை: தமிழகத்தில் நேற்று திண்டுக்கல், கோவை, தஞ்சை, நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் மாடுகள் முட்டி 2 பேர் பலியாகினர். காளையை ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்ததில் இருவர் இறந்தனர்.திண்டுக்கல்  அருகே நல்லமநாயக்கன்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 500 காளைகளும், 300  மாடுபிடி வீரர்களும் களம் இறக்கப்பட்டனர்.  வாடிவாசல் வழியாக  சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளை முட்டியதில்  நத்தம் வெள்ளக்குட்டு பகுதியை சேர்ந்த  நாகராஜ் (21) உயிரிழந்தார். 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.  விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே  நெடுங்குளத்தில் பறவை காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் மாடு முட்டி 21 பேர் காயமடைந்தனர். கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் கோவை செட்டிபாளையத்தில் மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.  ஜல்லிக்கட்டில்  அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் காளைகள் உட்பட 900 காளைகளும், 820 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர்.  

இதில், புதுக்கோட்டை மாவட்டம், வீராலிமலை தாலுகா, துள்ளம்பட்டியை சேர்ந்த சுபாஷ் (23) என்பவர் காளையை அடக்க முயன்ற போது, மாட்டின் கொம்பு அவரது நெஞ்சு பகுதியில் குத்தியது. இதில் படுகாயமடைந்த சுபாஷ், கோவை அரசு  மருத்துவமனையில் இறந்தார். காளையை ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்து இருவர் சாவு: தஞ்சை மாதாக்கோட்டையில் நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு நடந்து. இதில் பங்கேற்க செங்கிப்பட்டி அடுத்த கல்விராயன் பேட்டையை சேர்ந்த துரைராஜ் (39), ராஜராஜசோழன் (25)  உட்பட 5 பேர் ஜல்லிக்கட்டு காளையுடன் மினிடோர் வேனில் சென்றனர். அங்கு மைதானத்தை விட்டு ஓடிய காளையை துரைராஜ் உள்பட 5பேரும் பிடிக்க முயன்றனர். ஆனால் காளை சிக்காமல் ஓட்டம் காட்டியது. பட்டுக்கோட்டை அருகே  காளையை மடக்கி வேனில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென வேன் சாலையில் கவிழ்ந்து துரைராஜ், ராஜராஜசோழன் இறந்தனர். 25 ஆண்டுக்குப்பின்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டியில், 25 ஆண்டுகளுக்கு பின் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில், 450 காளைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

Tags : Dindigul ,Coimbatore ,Tanjore ,Namakkal 2 , Jallikattu ,Dindigul, Coimbatore, Tanjore, Namakkal
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...