×

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ‘செக்’ அதிக விலைக்கு மது விற்றால் கூண்டோடு பணியிட மாற்றம்: நிர்வாகம் திடீர் முடிவு

சென்னை: அதிகவிலைக்கு மதுவிற்பனை செய்யும் ஊழியர்கள் மட்டுமின்றி அவருடன் கடையில் பணியாற்றும் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கை வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய்  ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களில் அச்சிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலை வைத்து வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, அதிக விலைக்கு மதுவிற்பனை செய்யும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, மாவட்டம் தோறும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. மேலும், மதுபாட்டில்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ₹1 கூடுதலாக வைத்து விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ₹1000 அபராதமும், ₹10 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்பவர்களுக்கு பணியிடமாற்றமும், ₹10 ஆயிரம்  அபராதமும் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் ஒரு ஊழியர் கூடுதல் விலை வைத்து மதுவிற்பனை செய்தால் அந்த கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக டாஸ்மாக்  வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது:கூடுதல் விலை வைத்து மதுவிற்பனை செய்வதை தடுக்க நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ₹10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. எனவே, ₹10 என்பதை ₹5 ஆக குறைக்க  நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதேபோல், இரண்டு முறைக்கு மேல் ஊழியர் ஒருவர் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தது கண்டறியப்பட்டால் அந்த கடையில் உள்ள அனைத்து ஊழியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்யவும் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை விரைவில் அமல்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு  கூறின.



Tags : administration ,Administration High , Czech employees, Workplace,administration, Sudden results
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...