×

வரும் 29ம் தேதியுடன் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: இதுவரை 5.91 டிஎம்சி நீர் வந்துள்ளது

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து வரும் 29ம் தேதியுடன்  தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது. இதுவரை 5.91 டிஎம்சி நீர் ஆந்திரா வந்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீர் தர வேண்டும். முதல் தவணை காலமான ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், இரண்டாவது தவணை காலமான ஜனவரி முதல்  ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். ஆனால், இதுவரை ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தண்ணீர் தந்ததில்லை. இந்த நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. இந்த நிலையில், முதல் தவணை காலத்தில் 8 டிஎம்சியில் 4 டிஎம்சி வரை தமிழகத்துக்கு ஆந்திரா தந்தது. தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் கூடுதலாக தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

கண்டலேறு அணையில் 38 டிஎம்சி வரை நீர் இருப்பு உள்ள நிலையில், தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட ஆந்திரா சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் இரண்டாவது தவணை காலம் ஏப்ரல் 30ம் தேதி வரை உள்ளது. ஆனால்,  கண்டலேறு அணையில் இருந்து திருப்பதி, நகரி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தர வேண்டியுள்ளது. எனவே, வரும் பிப். 29ம் தேதி உடன் தண்ணீர் திறப்பை நிறுத்த ஆந்திரா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்படி 4 டிஎம்சி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு, தற்போது வரை ஆந்திர நீர்வளப்பிரிவு அதிகாரிகள்  பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2 தவணை காலத்தையும் சேர்த்து தற்போது வரை 5.9 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு  குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி 283 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர நீர்வளப்பிரிவு அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1691 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 72 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன்  கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2669 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1825 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.இந்த நீர் இருப்பை கொண்டு அக்டோபர் வரை சமாளிப்பது சிரமம் தான் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Water opening ,Kanthalengara Dam ,TMC ,Continental Dam , coming 29th, Water ,Discontinuation ,Continental Dam
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு