×

25 ஆண்டுகளுக்கு பின்பு போடிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 400 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டு

சேந்தமங்கலம்: நாமக்கல்  மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் கடந்த 25  ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அதன்பின்பு பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளிக்க வில்லை. இதனையடுத்து இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 23ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இதன்படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கலெக்டர் மெகராஜ், எம்எல்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்று கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். இதில் திருச்சி, மதுரை, தம்மம்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன. இதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு,  வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் வெற்றி பெற்ற மாடு மற்றும் மாடுபிடி வீரர் களுக்கு பிரிட்ஜ், கட்டில், வெள்ளி நாணயம் போன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் போட்டி நடக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது 25 ஆண்டு களுக்கு பின்பு நடப்பதால் இதனை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க நாமக்கல் எஸ்பி அருளரசு தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



Tags : Bodinayakanpatti ,Jallikattu Kollam ,cow soldiers , Bodhi Nayakanpatti, Jallikattu, Bulls, Cattlemen
× RELATED தீ மிதி விழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடன்