×

கடலூர் மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதாக ரூ.17.97 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் கைது

கடலூர்:  ஏடிஎம்மில் பணம் நிரப்புவதாக ரூ.17.97 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன முன்னாள் ஊழியரை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் கடலூர் மாவட்டத்திலுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஒப்பந்தம் எடுத்து செயல்பட்டு வருகிறது. வங்கிகளிலிருந்து பணத்தை பெற்று அதனை குறிப்பிட்ட ஏடிஎம்களில் நிரப்புவதோடு, ஏடிஎம் இயந்திரத்தின் சிறிய அளவிலான பழுதுகளையும் நீக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் கணக்குகள் கடந்த 28-9-2016 அன்று தணிக்கை செய்யப்பட்டதில் ரூ.22.97 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, நிறுவனம் நடத்திய விசாரணையில் தணிக்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக நிறுவனத்தின் பணக்காப்பாளர் வேலையிலிருந்து நின்ற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள பூதாமுரை சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் சுதாகருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் (41) மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், இந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், பணக்காப்பாளரான சுதாகர் (41), அவருக்கு பயிற்சியளித்த மற்றொரு பணக்காப்பாளர் சிவகுமார், முன்னாள் பணக்காப்பாளர் பணியிலிருந்த சம்பத்குமார், சுதாகரின் நண்பர் கனகராஜ் என 6 பேர் கூட்டாக சேர்ந்து 6 மாதத்தில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதற்கிடையில், தனக்கு உடல்நிலை சரியில்லையெனக் கூறி பணியில் இருந்து விடுவித்த நாளில் சுதாகர் ரூ.5 லட்சத்தை விருத்தாசலத்திலுள்ள ஒரு ஏடிஎம்மில் நிரப்பியுள்ளார். எனவே, மீதமுள்ள ரூ.17.97 லட்சம் மோசடியாக கையாடல் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதற்கிடையில், கனகராஜ், சிவகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று தலைமறைவாகினர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் பூதாமூருக்கு வந்திருந்த சுதாகரை குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் கைது செய்து விருத்தாசலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

3 ஏடிஎம்களில் பணம் நிரப்பவில்லை
விருத்தாசலம் முதல் மங்கலம்பேட்டை வரையிலான 14 ஏடிஎம் இயந்திரங்களில் 3 இயந்திரத்தில் பணத்தை நிரப்பாமலேயே கணக்கு காட்டியது ஏடிஎம் மோசடியில் தெரிய வந்தது. மேலும் இதுபோன்ற செயல்பாட்டால் தான் பல்வேறு ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : district ,Cuddalore ,ATM , Rs.17.97 lacs , ATM , Cuddalore district,Former employee,arrested
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!