×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வழங்கல்: தொழிலாளிக்கு உடல்நிலை பாதிப்பு

துறையூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிய காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட தொழிலாளிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. துறையூர் அருகே உள்ள வெங்கடம்மாள்சமுத்திரத்தை சேர்ந்தவர் சிவபாலகுமார் (44). இவருக்கு மனைவி பூபதி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் எரகுடி நில அளவையரிடம் உதவியாக கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென இதய ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டதால் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அருகில் இருக்கும் எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி எரகுடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு 15 நாட்களுக்கு மாத்திரை வாங்க வந்தார். அப்போது மருந்தாளுனர் இல்லாததால் அங்கு கட்டு கட்டுபவர் கொடுத்த மாத்திரையை வாங்கி கொண்டு சென்றார். சிவபாலகுமார் 3 வேளை, மாத்திரையை சாப்பிட்டார்.

நேற்று முன்தினம் அவருக்கு தலைசுற்றல் மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாங்கி வந்த மாத்திரையை எடுத்து பார்த்தபோது அது கடந்த ஜனவரியுடன் காலாவதியானது தெரியவந்தது. காலாவதியாகி ஒரு மாதமான மாத்திரையை உட்கொண்டதால் சிவபாலகுமாருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியரிடம் சிவபாலக்குமார் கேட்டபோது, உரிய பதிலளிக்காமல் காலாவாதியான மாத்திரையை கொடுத்து விட்டு வேறு மாத்திரையை வாங்கி செல்லுமாறு கூறினார். எனவே காலாவதியான மாத்திரையை வினியோகித்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டுமென சிவபாலகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Presentation, expired pills, primary health care, health impact, worker
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...