×

வனப்பகுதியில் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டிகளை தேடி குட்டிகளுடன் வரும் யானைகள்: வனத்துறை தீவிர கண்காணிப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் யானை கூட்டம் குட்டிகளுடன் வந்து தண்ணீர் குடித்து விட்டுச் செல்வதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்னரே, கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் வறட்சியால் அங்குள்ள நீர்நிலைகள் வற்றி வருவதாலும், இலை தழைகள் காய்ந்து சருகாகியுள்ளதாலும் யானை உள்ளிட்ட வன விலங்கினங்கள் ஊருக்குள் வரும் அபாயம் காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், தர்மபுரி மண்டலம் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாப்பு மற்றும் தர்மபுரி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின்படி, வனச்சரக அலுவலர் சேகர் தலைமையில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

சின்னாறு மற்றும் ராசிக்குட்டை வனப்பகுதியில், சோலார் மின்சாரம் மூலம் இயங்கும் மோட்டார்கள் மூலம் போர்வெல்களில் தண்ணீர் எடுத்து புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்பி வைத்து வருகின்றனர். மேலும், ஆற்றுப்படுகையில் பொக்லைன் மூலம் சிறு சிறு பள்ளங்களும் தோண்டப்பட்டப்பட்டு வருகிறது. இதில், சுமார் 4 அடி ஆழத்திலேயே நீரூற்று கிடைக்கிறது. இந்த தண்ணீரை யானை மற்றும் வன விலங்குகள் குடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல், வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வனத்தையொட்டிய பகுதிக்கு குட்டிகளுடன் வந்த யானைகள் அங்குள்ள தொட்டிகளில் நிரப்பி வைத்துள்ள தண்ணீரை குடித்தும், அதனை உறிஞ்சி உடல் மீது அடித்து இளைப்பாறி விட்டும் சென்றன. எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் உக்கிரமடையும்போது, யானைகளின் வரத்து அதிகரிக்கும் என்பதால், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Elephants, search , water tanks,thirst,wild
× RELATED மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர்...